மட்டக்குளி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளுக்கான மின் வழங்கல் துண்டிப்பு - நடந்தது என்ன ? - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

மட்டக்குளி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளுக்கான மின் வழங்கல் துண்டிப்பு - நடந்தது என்ன ?

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து வருமானத்தை உழைத்துக் கொள்வதில் ஏற்பட்ட நெருக்கடிகளால் நிலுவை மின் கட்டணத் தொகையை செலுத்த முடியாத நிலையிலுள்ள மட்டக்குளி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளுக்கான மின் வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருக்கும் அதேவேளை, சலுகை அடிப்படையில் மின் கட்டணத்தை அறவிடுவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வட கொழும்பு இணைப்பாளரும், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான ராஜு பாஸ்கரானிடம் வினவியபோது அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் தமது வேலை வாய்ப்புக்களை இழந்திருப்பதுடன் தமக்கான வருமானத்தை உழைத்துக் கொள்வதில் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மின் கட்டணங்களையும் நீர்ப் பாவனைக் கட்டணங்களையும் செலுத்துவதில் மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டிருந்ததன் காரணமாக, 'மின் கட்டணங்களை செலுத்துவதற்கு எதிர்வரும் 6 மாத கால அவகாசத்தை வழங்குவதாக' உரிய விவகாரத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அறிவித்தார்.

அதேபோன்றதொரு அறிவிப்பு நீர் வழங்கலுக்குப் பொறுப்பான அமைச்சரினாலும் மேற்கொள்ளப்பட்டது. எனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 6 மாத கால அவகாசம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமே நிறைவடையும் என்பதால் பொதுமக்களும் அவர்களது மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தியிருக்கவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மட்டக்குளி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஃபெர்குஷன் வீதி, ஜுபிலி வீதி, ரொட்ரிகோ இடம், சேர்ச் வீதி, சென் மேரிஸ் வீதி ஆகிய இடங்களில் வசிப்பவர்களில் மின் கட்டணங்களை செலுத்தாதவர்களின் வீடுகளுக்கான மின் வழங்கல் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது.

அது குறித்து உரிய அதிகாரிகளிடம் வினவியபோது, 50 ஆயிரம் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகையிலான மின் கட்டணத்தை நிலுவையாகக் கொண்ட வீடுகளுக்கான மின் வழங்கல் மாத்திரமே துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

இருப்பினும், அது குறித்து ஆராய்ந்து பார்த்தபோது 39 ஆயிரம் ரூபாவை நிலுவையாகக் கொண்டவர்களுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

எனவே இது குறித்து உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடியதன் பின்னர் 50 - 60 சதவீதமான மின் கட்டணத்தைச் செலுத்தியுள்ள வீடுகளுக்கும், மின் கட்டணத்தை செலுத்த முடியாத மிகவும் வறிய நிலையில் இருக்கும் வீடுகளுக்கும் மாத்திரம் மறுநாள் மின்சாரம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உரிய அமைச்சிற்குச் சென்று இது பற்றி முறைப்பாடளித்து, அமைச்சின் செயலாளரின் தலையீட்டின் மூலம் நிலுவையாகவுள்ள மின் கட்டணத் தொகையை மூன்று தவணைகளில் செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவ்வாறு தவணை அடிப்படையில் செலுத்துவதற்குக்கூட வசதியற்றவர்களுக்குத் தொடர்ந்தும் மின் வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளமையால், அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பொதுமக்களுக்கான மின் வழங்கலைத் துண்டிப்பதையும் மின் கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு அழுத்தம் பிரயோகிப்பதையும் விடுத்து, சலுகை அடிப்படையிலான மின் கட்டணச் செலுத்துகை வழிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad