ராஜபக்ஷாக்களின் பாதணிகளின் கீழ் மிதிபட்டிருக்கும் குழுவினராலேயே நாடு ஆளப்படுகின்றது - ஹெக்டர் அப்புஹாமி - News View

About Us

About Us

Breaking

Saturday, July 17, 2021

ராஜபக்ஷாக்களின் பாதணிகளின் கீழ் மிதிபட்டிருக்கும் குழுவினராலேயே நாடு ஆளப்படுகின்றது - ஹெக்டர் அப்புஹாமி

(நா.தனுஜா)

நாட்டின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களில் பெரும்பான்மையானோர் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்களேயாவர். அவர்கள் அனைவரும் இரவில் கூடி மேற்கொள்ளும் தீர்மானம், மறுநாள் அமைச்சரவையின் தீர்மானமாக அறிவிக்கப்படுகின்றது. ராஜபக்ஷ குடும்பத்தினால் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை அக்குடும்பத்தின் விசுவாசிகளாக செயற்படும் அமைச்சர்களும் மாற்றமின்றி ஏற்றுக் கொள்கின்றார்கள். எனவே ராஜபக்ஷாக்களின் பாதணிகளின் கீழ் மிதிபட்டிருக்கும் குழுவினராலேயே நாடு ஆளப்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய அரசாங்கம் முழுமையாகத் தோல்வி கண்டிருக்கின்றது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான இயலுமை ஜனாதிபதிக்கும் அவருடைய குடும்பத்திற்கும் இல்லை என்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைக் களமிறக்கும் அதேவேளை, தற்போதைய அரசாங்கத்திலேயே தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டாம் என்று ஏனைய கட்சிகளுக்கும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

எதிர்வரும் காலத்தில் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையிலான ஆட்சியொன்றை முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைந்து, அவற்றின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு அதன் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டமொன்றைத் தயாரிப்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment