தனிமைப்படுத்தப்பட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் தொடர்பில் ஆட்கொணர்வு எழுத்தானை மனு தாக்கல் - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

தனிமைப்படுத்தப்பட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் தொடர்பில் ஆட்கொணர்வு எழுத்தானை மனு தாக்கல்

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவை, உடனடியாக நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு இடைக்கால உத்தரவொன்றினை பிறப்பிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் ஹபயாஸ் கோபஸ் ரிட் எனும் ஆட்கொணர்வு எழுத்தானை மனு தாக்கல் செய்யப்பட்டது.

துமிந்த நாகமுவவின் மனைவி, துலானி பிரியங்கிகா இம்மனுவை சட்டத்தரணி நுவன் போப்பகே ஊடாக நேற்று தாக்கல் செய்தார்.

பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொம்பனித் தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சேல குணவர்தன, கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி, பல்லேகலை தனிமைப்படுத்தல் நிலையத்தின் பொறுப்பதிகாரி / கட்டளை தலபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி, முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 7 பேர், இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் இரு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராக அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது கொம்பனித் தெரு பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக மனுதாரர் 8 பக்கங்களைக் கொண்ட குறித்த ஆட்கொணர்வு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றில் அன்றையதினம் ஆஜர் செய்யப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டதாக கூறும் மனுதாரர், நீதிமன்றில் பிணை கையெழுத்திட்டு நகர்ந்து செல்லும் போது பொலிசாரால் தடுக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக்கூறி வலுக்காட்டாயமாக அழைத்து செல்லப்பட்டதாக மனுதாரர் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பொலிசார் எந்த ஆவணங்களையும் மனுதாரருக்கு காண்பிக்கவில்லை எனக்கூரும் மனுதாரர் அவர் தற்போது பல்லேகலை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே எந்த சட்ட ரீதியிலான அடிப்படைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரை உடனடியாக விடுவித்தும், அவரை இம்மன்றில் ஆஜர் செய்ய பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் இம்மனு ஊடாக மேன் முறையீட்டு மன்றினை கோரியுள்ளார்.

துமிந்த நாகமுவவுடன் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் சிலர் சார்பிலும் ஆட்கொணர்வு எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad