பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படாவிட்டால், டெல்டாவால் கொரோனா வைரஸ் பரவலின் நான்காவது அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படாவிட்டால், டெல்டாவால் கொரோனா வைரஸ் பரவலின் நான்காவது அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

(நா.தனுஜா)

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் அச்சுறுத்தல் இன்னமும் குறையவில்லை என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே எமது நாட்டில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், மேலும் பல டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கக்கூடும். எனவே பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படாவிட்டால், இந்த டெல்டா வைரஸ் காரணமாக கொரோனா வைரஸ் பரவலின் நான்காவது அலைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணிகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பங்களிப்புடன் மிகவும் செயற்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் கடந்த வாரம் கொழும்பு மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியிருந்தோம்.

ஆரம்பத்தில் நாளொன்றில் 10,000 - 15,000 வரையில் வழங்கப்பட்டுவந்த தடுப்பூசிகள், சுகாதார அமைச்சுடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இணைந்ததன் பின்னர் மேலும் செயற்திறன் பெற்றிருப்பதுடன் நாளொன்றில் வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எனவே இவ்வாறான அடிப்படையில் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை விரைந்து முன்னெடுத்து, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

அதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் அச்சுறுத்தல் இன்னமும் குறையவில்லை என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சர்வதேச நாடுகளில் கொவிட்-19 வைரஸின் புதிய திரிபுகள் பரவி வருகின்றன. ஏற்கனவே எமது நாட்டில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், மேலும் பல டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உயர்வாகக் காணப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படா விட்டால், இந்த டெல்டா வைரஸ் காரணமாக கொரோனா வைரஸ் பரவலின் நான்காவது அலைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படலாம்.

மேலும் டெல்டா உட்பட கொவிட்-19 வைரஸின் திரிபுகள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளும் இடங்களை மேலும் விஸ்தரிக்க வேண்டியது அவசியமாகும்.

அதேவேளை இந்த வைரஸ் திரிபுகளின் பரம்பல் மற்றும் மாறுபாடு ஆகியவை தொடர்பிலும் உரியவாறு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சர்வதேச நாடுகள் பலவற்றிலும் திரிபடைந்த டெல்டா வைரஸின் தாக்கம் உயர்வாகக் காணப்படுகின்றது.

எனவே எதிர்வரும் காலங்களில் அதன் தாக்கம் இலங்கையிலும் வியாபிக்கக்கூடும். ஆகவே சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை தொடர்ந்தும் இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment