யுரேனியத்தை செறிவூட்டும் செயற்பாட்டினை ஆரம்பித்தது ஈரான் : அணு பேச்சில் நெருக்கடி - News View

Breaking

Post Top Ad

Thursday, July 8, 2021

யுரேனியத்தை செறிவூட்டும் செயற்பாட்டினை ஆரம்பித்தது ஈரான் : அணு பேச்சில் நெருக்கடி

அணு ஆயுதம் ஒன்றை உருவாக்குவதற்கு உதவக்கூடிய செறிவூட்டப்பட்ட யுரோனிய உலோக உற்பத்தி செயற்பாட்டை ஈரான் ஆரம்பித்திருப்பதாக ஐ.நா அணு கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சி உலை ஒன்றுக்கு எரிபொருளை மேம்படுத்த இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக, சர்வதேச அணு சக்தி நிறுவனத்திடம் ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த நகர்வு கைவிடப்பட்ட 2015 அணு உடன்படிக்கையை புதுப்பிக்கும் பேச்சுவார்த்தைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

'துருதிருஷ்டவசமாக பின்னோக்கிச் செல்லும் செயற்பாடு' என்று அமெரிக்க இது பற்றி கவலை வெளியிட்டுள்ளது.

'விரிவான கூட்டு செயல் திட்டம்' என்று உத்தியோகபூர்வமாக அறியப்படும் உடன்படிக்கையின்படி, ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை கடினமாக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு பகரமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீதான தடைகளை தளர்த்த முன்வந்தன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2018 இல் இந்த உடன்படிக்கையில் இருந்து விலகி, ஈரான் மீதான தடைகளை மீண்டும் கொண்டுவந்ததை அடுத்து ஈரான் உடன்படிக்கையில் பல கட்டுப்பாடுகளையும் மீறி செயற்பட்டது.

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ஈரானுக்கு எதிரான டிரம்ப் கொண்டுவந்த தடைகளை தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் ஈரானுடனான உடன்படிக்கையை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையே வியன்னாவில் தற்போது பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமான இந்தப் பேச்சுவார்த்தை கடந்த ஜூன் 20 ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

அணு உடன்படிக்கையின் கடப்பாடுகளுக்கு பகரமாக அமெரிக்காவின் தடைகளை தளர்த்துவதை, ஈரான் ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் இப்ராஹிம் ரயிசி விரும்புகிறார்.

எனினும் ஈரான் யுரோனிய செறிவூட்டல் செயற்பாட்டை ஆரம்பித்திருப்பது பற்றிய அறிவிப்பை அணு கண்காணிப்புக்குழு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

ஈரானின் இந்த முடிவு பற்றி பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கடும் கவலையை வெளியிட்டுள்ளது. 

'அணு ஆயுதம் ஒன்றை உருவாக்குவதற்கு முக்கிய படியாக உள்ள யுரோனிய உலோகத்திற்கான தேவை ஈரானுக்கு இல்லை' என்று இந்த மூன்று நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

'தற்போதைய நிலை, ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளில் பெற்ற முன்னேற்றங்களுக்கு மத்தியில் வியன்னா பேச்சுவார்த்தையின் வெற்றிக்கு ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரிய தலைநகரில் இடம்பெறும் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் திரும்பும்படியும் ஈரானை இந்த மூன்று நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad