உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளது - எச்சரிக்கை விடுத்தார் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 22, 2021

உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளது - எச்சரிக்கை விடுத்தார் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம்

சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கும் நிலையில், டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 138 வது அமர்வில் பேசும்போது இது தொடர்பாக கூறியதாவது,

உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும்.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் கண்டுபிடிப்பு மற்றும் உலகம் முழுவதும் அதன் பயன்பாடுகள் மட்டுமின்றி, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, அனைவருக்கும் சமமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்காதது ஆகும்.

குறிப்பாக குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள். ஆனால் வளர்ந்த நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் உட்பட தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள் மற்றும் பிற வழிகளைப் பகிர்ந்து கொள்வதில் தற்போதைய உலகளாவிய அநீதி ‘‘சமூக மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்கு’’ மட்டுமின்றி, வைரஸ் மேலும் பரவுவதற்கும் வழிவகுக்கிறது.

இதில் ஒரு திருப்புமுனையை காண வேண்டுமென்றால், உலக சுகாதார ஸ்தாபனம், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவை இதற்கு முன்னர் கோடிட்டுக்காட்டிய பல்வேறு இலக்குகளை அடைய வேண்டியது முக்கியம் ஆகும்.

இதில் முக்கியமாக ஒவ்வொரு நாட்டிலும் வருகின்ற செப்டம்பர் மாதத்துக்குள் குறைந்தபட்சம் 10 சதவீத மக்கள் தொகைக்காவது தடுப்பூசி சென்றடைந்திருக்க வேண்டும். ஆண்டிறுதிக்குள் 40 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு மத்திய பகுதிக்குள் 70 சதவீதமாக உயர்ந்திருக்க வேண்டும் என கூறினார்.

No comments:

Post a Comment