இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை : 90 சதவீதம் தொழில் முனைவோர்தான் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துகின்றனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை : 90 சதவீதம் தொழில் முனைவோர்தான் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துகின்றனர்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தொற்று நிலைமையால் சுற்றுலா வியாபாரிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். புதிய வழிகாட்டலின் பிரகாரம் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தல் செயற்பாடின்றி தமது சுற்றுலாவைத் தொடர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகளுக்கு நாட்டை முழுமையாக திறப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்போம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சுற்றுலாத் துறையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் வலுவானதாக இருந்தது. அந்நிய வருவாய் அதிகமாக கிடைக்கும் ஒரு முறைமைதான் சுற்றுலாத் தொழில்துறை. 2009ஆம் ஆண்டின் பின்னர் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய தொழில்முனைவோரால் வெற்றிகரமாக இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க முடிந்தது. 90 சதவீதம் தொழில் முனைவோர்தான் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துகின்றனர். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெறும் வரை நாட்டின் சுற்றுலாத் துறையை கொண்டு சென்றது இவர்கள்தான். ஆகவே, இவர்களை பாதுகாப்பது எமது பொறுப்பாகும். 

அதேபோன்று சுற்றுலாத் துறையில் அனுபவமிக்கவர்கள் வேறு தொழில்களை நோக்கி நகர்கின்றமையை அண்மைக் காலமாக காண முடிகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் கொவிட் தொற்று காரணமாக தொடர்ச்சியாக இவர்கள் மூன்று வருடங்கள் தமது தொழிலை முன்னெடுக்க முடியாது போனமையாலேயே வேறு தொழில் வாய்ப்புகளை நோக்கி நகர்கின்றனர்.

சுற்றுலாத் துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தது. சுற்றுலாத்துறை தொழில் முனைவோரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன்கள் மற்றும் லீசிங்கை மீள செலுத்துவதற்கு 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பல்வேறு சலுகைகளை அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது. 

கடந்த மாதம் 9ஆம் திகதி மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இவர்களுக்கான கடன் சலுகையை ஜூலை (இம்மாதம்) 31ஆம் திகதி வரை நீடிக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுடன், எதிர்காலத்தில் கொவிட் தொற்று பரவல் நிலைமைகளை ஆய்வுக்கு உட்படுத்தி சலுகைக் காலத்தை வழங்குவது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சலுகைக் காலத்தில் வட்டி செலுத்துவதை இடைநிறுத்தவும் லீசிங்க செலுத்தப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்தவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் சுற்றுலாத் துறையினருக்கு பாதிப்பின்றி இலங்கை மத்திய வங்கி உரிய தீர்மானங்களை எடுக்கும். 

இருந்தபோதும் சுற்றுலாத் துறையை நம்பி தொழில் செய்துவருபவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை வழங்குவதாக இருந்தால், சுற்றுலாத் துறையை விரைவாக யதார்த்த நிலைக்கு கொண்டுவர வேண்டும். அதனை நாங்கள் விரைவாக மேற்கொள்வோம்.

அத்துடன் சுற்றுலாத் துறையை மீள கட்டியெழுப்பும் தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கின்றன சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியினர் இதனை விமர்சிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் கிராமங்களுக்கு வருகை தந்தால் அடித்து விரட்டுமாறு கூறுகின்றனர். சுற்றுலாப் பயணிகளால் கொவிட் தொற்று பரவியுள்ளதாகவும் கூறுகின்றனர். 

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாக் குழுக்களால் கொவிட் தொற்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரவவில்லையென்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன். நாட்டுக்கு சுமையற்ற விதத்தில் சுற்றுலாப் பயணிகளை கையாளும் விசேட முறைமைகளை நாம் கையாளுகிறோம் என்றார்.

No comments:

Post a Comment