56 ஆயிரம் மெட்ரிக் தொன் இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானம், இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென்கிறார் ஹர்ஷ டி சில்வா - News View

Breaking

Post Top Ad

Sunday, July 4, 2021

56 ஆயிரம் மெட்ரிக் தொன் இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானம், இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென்கிறார் ஹர்ஷ டி சில்வா

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தினால் கடந்த மே மாதம் 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் 56,000 மெட்ரிக் தொன் இரசாயன உரத்தினை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 56,000 மெட்ரிக் தொன் இரசாயன உரத்தினை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் மே மாதம் 6 ஆம் திகதி உரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்படக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் குறித்து அரசாங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். காரணம் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படுமா ? இரத்து செய்யவில்லை என்றால் அதற்கு புறம்பாக உரத்தை இறக்குமதி செய்வது சட்ட ரீதியான பாதிப்பை ஏற்படுத்தாதா? அவ்வாறில்லை எனில் வேறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமா? என்பவை தொடர்பில் தெளிவுபடுத்துமாறு பொறுப்புள்ள மக்களுக்கான எதிர்க்கட்சி என்ற ரீதியில் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad