இம்மாத இறுதிக்குள் மேலும் 40 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும், இதுவரை மொத்தமாக 7.1 மில்லியன் கிடைக்கப் பெற்றுள்ளது - சன்ன ஜயசுமன - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

இம்மாத இறுதிக்குள் மேலும் 40 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும், இதுவரை மொத்தமாக 7.1 மில்லியன் கிடைக்கப் பெற்றுள்ளது - சன்ன ஜயசுமன

(நா.தனுஜா)

சீனாவிலிருந்து நேற்று கிடைக்கப் பெற்ற 20 இலட்சம் தடுப்பூசிகளுடன் சேர்த்து இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு மொத்தமாக 7.1 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், இம்மாத இறுதிக்குள் மேலும் 40 இலட்சம் கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஒளடத உற்பத்தி, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக் கொண்டோர் எண்ணிக்கை
தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் (சனிக்கிழமை பூர்த்தியடைந்த பின்னரான காலப்பகுதியில்) ஏதேனுமொரு கொவிட்-19 தடுப்பூசியின் முதலாம் கட்டத் தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3,907,253 ஆகும். அதேவேளை 1,423,239 பேர் இரண்டு கட்டத் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாத்திரம் 132,510 பேருக்கு சைனோபாம் முதலாம் கட்டத் தடுப்பூசியும், 34,555 பேருக்கு சைனோபாம் இரண்டாம் கட்டத் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் (சனிக்கிழமை பூர்த்தியடைந்த பின்னராக காலப்பகுதியில்) 385,647 பேருக்கு இரண்டாம் கட்ட அஸ்ராசெனேகா தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதுடன் 114,795 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி முதலாம் கட்டமாகவும் 14,464 பேருக்கு அதே தடுப்பூசி இரண்டாம் கட்டமாகவும் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையில் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சீனப் பிரஜைகளில் 2,865 பேருக்கு முதலாம் கட்ட சைனோபாம் தடுப்பூசியும் 2,435 பேருக்கு இரண்டாம் கட்ட சைனோபாம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாரம் முதல் தடுப்பூசி வழங்கல் பணிகள் விரைவுபடுத்தப்படும்
நாடளாவிய ரீதியில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணிகள் இவ்வாரத்திலிருந்து விரைவுபடுத்தப்படவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் நாடளாவிய ரீதியில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான தடுப்பூசி வழங்கும் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை போதுமானளவு அஸ்ராசேனேகா தடுப்பூசிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று பிரதி சுகாதாரப் பணிப்பாளர் விசேட வைத்தியநிபுணர் ஹேமந்த ஹேரத் ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், அதன் பின்னர் அஸ்ராசெனேகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் பகிர்ந்தளிப்பு
மேலும் சீனாவிலிருந்து 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) நாட்டை வந்தடைந்துள்ளன.

இவற்றில் 5 இலட்சம் தடுப்பூசிகள் கம்பஹா மாவட்டத்திற்கும் 3 இலட்சம் தடுப்பூசிகள் களுத்துறை மாவட்டத்திற்கும் கொழும்பு மற்றும் குருணாகல் மாவட்டங்களுக்கு 2 இலட்சம் தடுப்பூசிகளும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

அதேபோன்று காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அநுராதபுரம், நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய எஞ்சியுள்ள தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படவிருப்பதாக ஒளடத உற்பத்தி, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிடைக்கப் பெற்ற 20 இலட்சம் தடுப்பூசிகளுடன் சேர்த்து இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு மொத்தமாக 7.1 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இம்மாத இறுதிக்குள் மேலும் 40 இலட்சம் கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment