வடக்கு ஜனாதிபதி மாளிகையை மையப்படுத்தி இந்தியத் தரப்பிடம் 3 பரிந்துரைகள் முன்வைப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, July 18, 2021

வடக்கு ஜனாதிபதி மாளிகையை மையப்படுத்தி இந்தியத் தரப்பிடம் 3 பரிந்துரைகள் முன்வைப்பு

ஆர்.ராம்

3.5 பில்லியன் ரூபா செலவில் வடக்கின் மாவிட்டபுரம் கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை இந்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு வடக்கினைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு இந்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படும்போது ஜனாதிபதி மாளிகையை வினைத்திறனான வழியின் பயன்படுத்துவதற்காக மூன்று பரிந்துரைகளும் குறித்த முக்கியஸ்தர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

முதலாவதாக யாழில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு நிரந்தர கட்டடத் தொகுதி எதிர்பார்க்கப்படும் நிலையில் குறித்த ஜனாதிபதி மாளிகையை யாழ்ப்பாணத்திற்கான துணைத் தூதரகமாகவும் அதனுடன் இணைந்த துணைத் தூதுவரின் தங்குமிடமாகவும் பயன்படுத்தும் வகையில் பொறுப்பேற்குமாறு இந்தியத் தரப்பிடம் முன்மொழியப்பட்டது.

எனினும் குறித்த மாளிகையானது யாழ். நகருக்கு வெளியில் அமைந்திருப்பதால் அந்தக் கோரிக்கையை இந்திய தரப்புக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அறிய முடிகின்றது.

அதனையடுத்து இரண்டாவதாக உயர்தர சுற்றுலா விடுதியொன்றை அமைக்கும் வகையில் இந்திய முதலீட்டாளர்களை மையப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரப்பட்டது. 

எனினும் யாழில் அமைக்கப்பட்டுள்ள கலாசார நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் அதன் சுமூகமான நிருவாகத்தினை உறுதி செய்த பின்னரே இந்த விடயத்தினை கையில் எடுக்க முடியும் என்று இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் மூன்றாவதாக இந்த மாளிகையை இந்தியாவின் அனுசரணையுடன் சமுத்திர மற்றும் கடல்சார் கற்கை நிலையமாக மாற்றும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவின் தென் பிராந்திய கடற் பாதுகாப்பினையும் உறுதி செய்யும் வகையிலான மூலோபாய நிலையமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தியத் தரப்பிலிருந்து இதுவரையில் எவ்விதமான உத்தரவாதங்களும் அளிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேநேரம் யாழில் செயற்பட்டு வரும் இந்தியத் துணைத் தூதரக தகவல்களின்படி இந்த விடயத்தில் அதீத கரிசனைகள் கொள்ளப்படவில்லை என்பதையே வெளிப்படுத்தியிருக்கின்றன.

இதேவேளை குறித்த ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டிருக்கும் காணிகளுக்குச் சொந்தமான இரு உரிமையாளர்களும் குறித்த நிலத்தினை தங்களது அனுமதியின்றி வெளியாருக்கு குத்தகைக்கோ அல்லது இதர உடன்படிக்கைகள் ஊடாக வழங்குவதை அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் நீதிமன்றத்தினை நாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த மாளிகையை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்த அடிப்படையில் 2012ஆம் ஆண்டு இதன் நிர்மாணப் பணிகள் நிறைவுக்கு வந்திருந்தன. 

எனினும் அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் குறித்த மாளிகை பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டிருந்தது. அச்சமயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாளிகை மத்திய அரசாங்கத்திற்கு தேவையில்லை என்றும் அதனை உயர்தர உல்லாசப் பயண விடுதியாக மாற்றப் போவதாகவும் அதற்காக விலைமனுக் கோரப்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

அந்த சமயத்தில் உயர்தர உல்லாசப் பயண விடுதியாக இதனை மாற்றுவதை விடவும் யாழ். பல்கலைக்கழகத்துடன் இதனை இணைக்குமாறும் இதில் 500 மாணவர்கள் வரையில் தங்கியிருந்து கற்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்திருந்தது.

அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் தங்கிருந்து கல்வியைத் தொடர்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் கடந்த முப்பது வருட போரால் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாகவும் வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு சுட்டிக்காட்டியிருந்தது.

இதேவேளை மிக அண்மையில் யாழ். மாநகரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவிலும் இந்திய முதலீட்டில் விஸ்தரிக்கப்பட்ட பலாலி விமான நிலையத்திலிருந்து சுமார் 5.5 கிலா மீற்றர் தொலைவிலும் 7 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மாளிகையானது செலன்திவ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்து அபிவிருத்தியின் கீழ் ‘சர்வதேச இணைப்பு நிலையம்’ என்ற பெயரில் 5 ஏக்கர் பகுதி முதலீட்டுக்காக வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பத்திரமொன்று தாயரிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் கடற்படையினரின் வசமுள்ள இந்த மாளிகையை ‘சர்வதேச விருந்தினருக்கான சந்திப்பு நிலையம்’ எனும் பெயரில் இலங்கை முதலீட்டு சபை ஏலத்தில் வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சார்பில் எதிர்ப்புக்களும் வெளியிடப்பட்டிருந்தன.

அதேநேரம் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் “இந்த மாளிகைக் கட்டடத்தை மாகாண சபைக்கு கையளிக்க வேண்டும் என்ற பிரேரணை வட மாகாண சபையில் 2016 ஆம் ஆண்டு என்னால் முன்வைக்கப்பட்டது. என்றும் அந்தப் பிரேரணை அங்கீகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad