கல்முனையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை அமுல் : உதாசீனம் செய்யும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

கல்முனையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை அமுல் : உதாசீனம் செய்யும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டுப்பாட்டு விலைகளில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை (03) மாலை, கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற வர்த்தகர்களுடனான விசேட கலந்துரையாடலின்போது, பிரதேச செயலாளர்கள் மற்றும் நுகர்வோர் அதிகார சபை புலனாய்வு உத்தியோகத்தர்களின் முன்னிலையில் அத்தியவசிய பொருட்களுக்கான விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை (04) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மரக்கறி வகைகள், பலசரக்குப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலையை விட அதிகரித்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது அறிவுறுத்திய மாநகர முதல்வர், அதற்கான பணிப்புரையையும் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு விடுத்துள்ளார்.

வியாபாரங்களின்போது கட்டாயம் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், இலத்திரனியல் தராசு பாவிக்கப்பட்ட வேண்டும் எனவும் இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டது. 

இவற்றை உதாசீனம் செய்யும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களது வியாபார அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் எனவும் மாநகர முதல்வரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் இரவு 9.00 மணிக்குப் பின்னர் மறு நாளைக்குரிய விலைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் இதற்கென விலை நிர்ணயக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, நுகர்வோர் அதிகார சபை புலனாய்வு உத்தியோகத்தர்களும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

(கல்முனை விசேட நிருபர்)

No comments:

Post a Comment