அரசாங்கமே எமது நாட்டை காட்டிக் கொடுத்து வருகின்றது. : அதிக கடன் இருக்கும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இலங்கை - கபீர் ஹாசிம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

அரசாங்கமே எமது நாட்டை காட்டிக் கொடுத்து வருகின்றது. : அதிக கடன் இருக்கும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இலங்கை - கபீர் ஹாசிம்

(ஆர்.யசி, எம்,ஆர்.எம்.வசீம்)

எமது அரசாங்க காலத்தில் பொருளாதார ரீதியில் பல பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் அந்த சுமையை பொதுமக்கள் மீது சுமத்தவில்லை. ஆனால் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். அத்துடன் இந்திய, சீன அரசாங்கங்களுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. இலங்கை அரசாங்கமே எமது நாட்டை காட்டிக் கொடுத்து வருகின்றது. அதனாலே இந்த அரசாங்கத்துக்கு நாங்கள் எதிர்ப்பு என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிதி முகாமைத்துவ பொறுப்பு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. சரியான முகாமைத்துவம் இல்லாமையே இதற்கு காரணமாகும். வெளிநாட்டு கடன் தொகையும் அதிகரித்திருக்கின்றது. நாட்டின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் நூற்றுக்கு 105 வீதம் வரை எமது கடன் அதிகரித்திருக்கின்றது. எமது காலத்திலும் பொருளாதார பிரச்சினைகள் இருந்தன. அவ்வாறான நிலைமையிலும் நாங்கள் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக 2019ஆம் ஆண்டு காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை தற்போது அதன் விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போதும் சில பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கின்றது.

பொருளாதார பிரச்சினைக்கு மத்தியிலும் எமது ஆதார கணக்கை நாங்கள் மறை பெருமானத்தில் பாதுகாத்து வந்தோம். அவ்வாறான சந்தர்ப்பங்கள் சுதந்திரத்துக்கு பின்னர் கடந்த அரசாங்க காலத்திலேயே இடம்பெற்றிருக்கின்றன.

மேலும் உலகில் நடுத்தரமான வருமானம் பெறும் நாடுகளில் அதிக கடன் இருக்கும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இலங்கை இருக்கின்றது. அதன் முதலாம் இடத்தில் இருப்பது லெபனான். நாங்கள் எந்த இடத்துக்கு பொருளாதார ரீதியில் விழுந்திருக்கின்றோம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

2020 நிறைவில் அரச நிறுவனங்களின் கடன் ஆயிரம் பில்லியன் ரூபாவை எட்டியிருக்கின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் கடன் எல்லையை மேலும் அதிகரித்துக் கொள்ள தீர்மானித்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதற்கு பொருத்தமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தவில்லை.

அத்துடன் நாட்டில் டொலர் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இந்த நிலைமையை சமாளிக்க, அரசாங்கம் எமது ஆட்புல ஒருமைப்பாட்டை காட்டிக் கொடுத்து, பொட் சிட்டியை விற்பனை செய்திருக்கின்றது. தற்போது எமது சுயாதீனத் தன்மையை காட்டிக் கொடுக்கும் வகையில் பல தீர்மானங்களை எடுத்திருக்கின்றது.

உலக நாடுகள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் எமது நாட்டில், அரசாங்கம் நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் இந்த விடயங்களை தெரிவிக்கும்போது சிலர் எமது கருத்தை திரிபுபடுத்தி, நாங்கள் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு எதிர்ப்பு என தெரிவித்து வருகின்றனர்.

நாங்கள் சீன அரசாங்கத்துக்கோ, இந்திய அரசாங்கத்துக்கோ அல்லது வேறு அரசாங்கங்களுக்கோ எதிர்ப்பு இல்லை. மாறாக நாங்கள் இலங்கை அரசாங்கத்துக்கே எதிர்ப்பு. இலங்கை அரசாங்கமே நாட்டின் முக்கிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து, நாட்டை காட்டிக் கொடுத்து வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad