மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, June 24, 2021

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெளத்த விசேட தினமான பொசொன் தினத்தையொட்டி இன்றையதினம் (24) சிறைக்கைதிகள் 93 பேருக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், சட்டத்திற்கு முரணனாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 16 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் விடுதலை செய்யப்பட்டதோடு, மேலும் 77 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுடன் கொலைக் குற்றம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

முன்னாள் எம்.பி.யும் ஹிருணிகா பிரேமசந்திரவின் தந்தையுமான பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரன் கொலைச் சம்பவம் தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம் குறித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய தற்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால், துமிந்த சில்வாவை விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad