மாணவரை கல்விப் புலத்திற்குள் மீட்டெடுக்க அவசரமாக வழி காண வேண்டியது அவசியம் : ரியூஷன் கல்வியினால் மாத்திரம் பயனில்லை, பாடசாலைக் கல்வியே கல்வி மற்றும் உளவிருத்திக்கு கைகொடுக்குமென்பதே கொரோனா பேரிடர் காலத்தில் அனைவராலும் உணரப்பட்டுள்ள உண்மை - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

மாணவரை கல்விப் புலத்திற்குள் மீட்டெடுக்க அவசரமாக வழி காண வேண்டியது அவசியம் : ரியூஷன் கல்வியினால் மாத்திரம் பயனில்லை, பாடசாலைக் கல்வியே கல்வி மற்றும் உளவிருத்திக்கு கைகொடுக்குமென்பதே கொரோனா பேரிடர் காலத்தில் அனைவராலும் உணரப்பட்டுள்ள உண்மை

பரீட்சைத் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை முடிவின் பிரகாரம் நான்காம் நிலையிலிருந்த கிழக்கின் பரீட்சை பெறுபேற்று அடைவு மட்டம் (output) ஒன்பதாம் நிலைக்குத் தள்ளப்பட்டதில் கொரோனா வைரஸ் தாக்கம் செலுத்தியிருந்தமை யாவரும் தெரிந்த விடயமாகும்.

இதேவேளை வெளியிடப்படவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எவ்வாறு அமையப் போகின்றனவென்பதை கல்விச் சமூகத்தினர் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

கடந்த கால கல்வி நடவடிக்கைகளில் கொரோனா வைரஸின் முதலாம், இரண்டாம் அலைத் தாக்கம் செலுத்தியிருந்த போதும், மாகாணக் கல்வித் திணைக்களம் வலயக் கல்வி அலுவலகங்கள் மூலம் பல்வேறு செயல் திட்டங்களை முன்வைத்திருந்தது. ஆனாலும் மாணவர் கற்றலில் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் கூறித்தான் ஆக வேண்டும்.

குறிப்பாக நிகழ்நிலை வகுப்புகள் (online class) ஏட்டிக்குப் போட்டியாக நடைபெற்ற போதும், வறுமையான நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை அந்த வகுப்புகள் எத்தனை வீதம் சென்றடைந்தனவென்பது கேள்விக்குரிய விடயமாகும்.

மூன்றாம் அலை கொவிட் வைரஸ் தற்போது திரிவுபட்ட நிலையில் தாக்கம் செலுத்துவதால், பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் நீண்ட காலம் எடுக்குமென்பதால் தரம்-1 இல் இருந்து உயர்தர வகுப்பு வரை மாணவர் கல்வியை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த ஆலோசனைகள் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளி (social distance) பேணியவாறு, முகக்கவசம் (face maks) அணிந்து கொண்டு வருமாறு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்தாலும், பெற்றோர் தமது பிள்ளைகளை தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைக்கு அனுப்பத் தயங்குவர் என்பதை கடந்கால அனுபவங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.

என்னதான் நடந்தாலும் எதிர்பார்த்திருக்கும் மூன்று பொதுப் பரீட்சைகளுக்கும் மாணவர்களை தயார்படுத்த வேண்டிய கட்டாயக் கடமை அதிகாரிகளுக்கும் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளது.

பாடசாலைக் கல்வியில் முன்னர் பெற்றோர் நம்பிக்கை இழந்திருந்தனர். ரியூஷன் வகுப்புகள் மீதே பெற்றோர் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கை இன்றில்லை. மாணவர்களின் கல்வி மற்றும் உள விருத்திக்கு பாடசாலைச் சூழலே அவசியம் என்பதை பெற்றோர் இப்போதுதான் உணர்ந்து கொண்டுள்ளனர்.

இன்றைய நிலைவரங்களைப் பார்க்கும் போது கொரோனாவிலிருந்து எவ்வாறு விடுபடலாம் எனும் சிந்தனையைத் தவிர வேறு எதையும் சிந்திக்க எவருக்குமே நேரமிருக்காது என்பதே உண்மை.

இது ஒருபுறமிருக்க, நிகழ்நிலைக் கல்வியை மேற்கொள்வதற்குரிய உபகரணமான லப்டொப் (laptop) வாங்குவதற்குரிய பணவசதி எல்லா பெற்றோரிடமும் இல்லையென்பது கவலைக்குரிய விடயமாகும். வறிய பெற்றோர் பலரின் பிள்ளைகள் வகுப்பறைகளில் நன்கு துலங்கக் கூடியவர்களாகவும் மீத்திறன் உள்ள (gifted chidren) மாணவர்களாகவும் உள்ளனர்.

தினக் கூலி பெறுவோர் நாளாந்த தொழில் வருமானம் இழக்கப்பட்ட நிலையில், ஒரு பயிற்சிப் புத்தகத்தையாவது வாங்கி தன் பிள்ளைக்கு உதவும் கையாலாகாத நிலையிலே இன்று காணப்படுகின்றனர். பாடசாலைகளில் முன்வைக்கப்பட்டுள்ள (எஸ்) பாஸ் திட்டம், ஐந்தாண்டுத் திட்டம் யாவும் அதிபர் அறையின் கிடப்பிலே காணப்படுகின்றன.

இணைப் பாடவிதானச் செயல்பாடுகளாக விளங்கும் (co curriculam) விளையாட்டுப் போட்டிகள், தமிழ்மொழி, ஆங்கில மொழி, சிங்கள மொழிதினப் போட்டிகள், விவசாய விஞ்ஞான மற்றும் மீலாத்தின போட்டிகளும் இல்லாத நிலையில் மாணவர்கள் ஏக்கங்களோடு காணப்படுகின்றனர்.

புதிய கல்விச் சீர்திருத்த (new refoms) விதப்புரையின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள தேர்ச்சி(competency) மையக் கலைத் திட்டம், பாடசாலை மட்டக் கணிப்பீடு (school bassed assesmend) உட்பட இன்னும் பல கல்விச் செயற்பாடுகளை பாடசாலைக் கல்வி நழுவ விட்டுள்ளது.

மாணவர் பாராளுமன்றம், சுற்றுலாக்கள், நூலகப் பயன்பாடு, மாணவர் மன்றம் போன்ற அறிவு திறன் மனப்பாங்கை வளர்க்கும் ஊன்றுகோல்களும் உடைந்த நிலையில் மாணவர் மத்தியில் வெறும் பரீட்சை பெறுபேற்றை மட்டும் வைத்து கல்வியின் மூலம் நற்பிரஜையாக்கல் எனும் திட்டம் வெற்றி பெறுமா என்பது இன்றைய கேள்வியாகும்.

சமகால நிகழ்வுகளை களமாகக் கொண்டு, கொரோனாவை எதிர்கொண்டு கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இன்றைய கல்விச் சமூகத்திற்கு முன்னுள்ள பாரிய சவாலாகும்.

நிகழ்நிலை வகுப்புகள் (online class) சாதாரண குடும்ப மாணவர்களையும் சென்றடையக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன், அதற்கான உபகரண வசதிகளும் வழங்கப்படுவது இன்றைய நிலையில் அவசியம். ஆசிரியர்கள் பாட அலகுகளை பூரணப்படுத்துவதற்கு செயலட்டைகளை தயாரித்து ஒவ்வொரு மாணவரின் வீடுகளுக்கு சென்றடையக் கூடிய வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

எஸ்.சிறாஜுதீன்
(நற்பிட்டிமுனை நிருபர்)
சிரேஷ்ட ஆசிரிய ஆலோசகர் (SlTAS)
வலயக்கல்வி அலுவலகம், கல்முனை

No comments:

Post a Comment

Post Bottom Ad