ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் 20 தமிழர்களை நாடு கடத்தியது ஜேர்மனி : பலவந்தமாக தனி விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பியது - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் 20 தமிழர்களை நாடு கடத்தியது ஜேர்மனி : பலவந்தமாக தனி விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பியது

ஜேர்மனி, பிராங்போர்ட் விமான நிலையத்தில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையானோர் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் சுமார் 20 தமிழர்கள் நேற்று முன்தினமிரவு பலவந்தமாக தனி விமானமொன்றில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு கடத்தப்படுவதற்காக போட்ஸ்ஹைம் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாமிலிருந்து இவர்கள் நேற்று முன்தினம் நண்பகல் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பிராங்போர்ட் கொண்டுவரப்பட்டனர்.

ஜேர்மனியிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மனித உரிமை அமைப்பும் ஏனைய சில அமைப்புகளும் இணைந்து ஜேர்மனியில் போட்ஸ்ஹைம் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கு எதிரில் கடந்த திங்கள் மாலையிலிருந்து ஒரு தொடர் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இந்தக் கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் பொலிஸ் பாதுகாப்புடன் வாகனமொன்று தடுப்பு முகாமுக்குள்ளே வந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு விமான நிலையம் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வாகனத்தைச் செல்ல விடாமல் தடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்ற போதிலும், கடுமையான பொலிஸ் பாதுகாப்புடன் வாகனம் வெளியேறியது.

பிராங்போர்ட் விமான நிலையத்திலும் பெருந்தொகையான தமிழர்களும், ஜேர்மன் நாட்டவர்கள் சிலரும் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களே நேற்று முன்தினம் இரவு விஷேட விமானம் ஒன்றின் மூலம் நாடு கடத்தப்பட்டதாக பிராங்போர்ட் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாடு கடத்தப்படுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment