அரசினால் தடை செய்யப்படாத இஸ்லாமிய அமைப்புக்கள் எங்கே ? மக்களுக்காக வீதியில் இறங்குவார்களா ? - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

அரசினால் தடை செய்யப்படாத இஸ்லாமிய அமைப்புக்கள் எங்கே ? மக்களுக்காக வீதியில் இறங்குவார்களா ?

சகோதர இஸ்லாமிய இயக்கங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதும், அவர்களை விமர்சிப்பதும், பள்ளிவாசலில் மார்க்க கடமைகளுடன் மாத்திரம் முடங்கிக்கொள்வதும் இஸ்லாமிய இயக்கங்களின் செயற்பாடுகளாக இருக்கக்கூடாது.

அத்துடன் மக்களிடம் வசூலிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்தவும் கூடாது. மாறாக மக்கள் பசி, பட்டினியினால் துன்பப்படுகின்றபோது அதனை வேடிக்கை பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்வதற்கு இஸ்லாமிய இயக்கங்கள் முன்வர வேண்டும்.

கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு வீடுகளுக்குள் முடங்கியுள்ளதனால், அன்றாடம் தொழில் செய்து வாழ்க்கை நடத்திய அப்பாவி ஏழைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதுடன், இயற்கை அனர்த்தம் காரணமாகவும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதேபோன்ற நிலை கடந்த வருடம் ஏற்பட்டபோதும், மற்றும் கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோதும் சில இஸ்லாமிய அமைப்புக்கள் முன்வந்து நாட்டின் பல பாகங்களிலும் வீடு வீடாக சென்று தங்களால் முடியுமான பலவிதமான உதவிகளை மக்களுக்கு செய்தார்கள்.

அத்துடன் பள்ளிவாசலுடன் மாத்திரம் முடங்கிவிடாமல் இரத்ததானங்கள் உட்பட ஏராளமான சமூகப்பணியிலும் ஈடுபட்டதானது மக்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்தது.

ஆனால் அவ்வாறு வீதியில் இறங்கி பணியாற்றிய இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தற்போது அரசாங்கம் தடை விதித்துள்ளது. கடந்த காலங்களைபோன்று அவ்வாறான இஸ்லாமிய இயக்கங்களினால் தற்போது பணியாற்ற முடியாது.

ஆனால் அந்த அமைப்புக்களை அரசாங்கம் வலிந்துசென்று தடைவிதிக்கவில்லை. மாறாக வேறு சில சகோதர இஸ்லாமிய அமைப்புக்களின் காழ்ப்புணர்ச்சியினால் அரசாங்கத்துக்கு வழங்கிய அழுத்தம் காரணமாகவே அரசாங்கம் துணிச்சலுடன் தடைவிதிக்கும் முடிவை எடுத்தது.

அரசாங்கத்தினால் தடை செய்யப்படாத எத்தனையோ இஸ்லாமிய இயக்கங்கள் இன்று காணப்படுகின்றது. அவ்வாறான அமைப்புக்கள் வீதியில் இறங்கி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.

குறிப்பாக இவ்வாறான அமைப்புக்களுக்கு அகில இலங்கை ஜமியதுல் உலமா சபையினர் வழிகாட்டுதல் அல்லது உற்சாகம் வழங்க வேண்டும்.

ஆடைகளால் அலங்கரித்துக்கொண்டு, அத்தர் பூசி, தலையில் தொப்பியும் போட்டுக்கொண்டு மக்கள் முன்பாக தங்களை இஸ்லாமியவாதிகளாக காண்பிப்பதனால் மாத்திரம் உண்மையான இஸ்லாமியவாதிகளாக பூரணத்துவம் அடைந்துவிட முடியாது.

எனவே மக்களுக்காக களத்தில் இறங்கி உதவி செய்த இஸ்லாமிய அமைப்புக்களை அரசாங்கம் தடை விதித்துள்ளதன் காரணமாக, பார்வையாளர்களாக இருக்கின்ற ஏனைய இஸ்லாமிய அமைப்புக்கள் வீதியில் இறங்கி மக்களுக்காக உதவி செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு வீதியில் இறங்கி பணியாற்றினால் அவர்களை வாழ்த்துவதற்கும், பாராட்டுவதற்கும், பிரார்திப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments:

Post a Comment

Post Bottom Ad