தேவைக்கேற்ப ஓய்வு பெற்ற தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தவும் - பிரதமர் மகிந்த சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

தேவைக்கேற்ப ஓய்வு பெற்ற தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தவும் - பிரதமர் மகிந்த சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தல்

ஓய்வு பெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்துமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இன்று (09) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, அரச ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரின் வேண்டுகோளின் பேரில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இவ்வறிவுறுத்தலை விடுத்தார்.

சுமார் 34,000 தாதியர்கள் தற்போது நாடு முழுவதும் பணிபுரிகின்றனர். இந்த சந்திப்பின் நோக்கம் அவர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்வதாக அமைந்தது.

தாதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் வசதிகளை அதிகரிப்பது குறித்து முருத்தெட்டுவே ஆனந்த நாயக தேரர் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நெவில் பெனாண்டோ மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சை பிரிவுகளில் பயிற்சி பெறாத தாதியர்களை ஈடுபடுத்தப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது வருடாந்தம் 2000 இற்கும் குறைவான தாதியர்கள் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி சுட்டிக்காட்டினார்.

தற்போது இந்த பிரிவுகளில் பணிபுரியும் பயிற்சி பெறாத தாதியர்கள், பணிபுரிந்த காலத்தை பயிற்சிக் காலத்தில் சேர்க்குமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.

அத்துடன், அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு குறுகிய கால பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். 840 தாதியர்களுக்கு ஏற்கனவே அதி தீவிர சிகிச்சை பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முணசிங்க தெரிவித்தார். அத்துடன், மேலும் 1,000 பேருக்கு விரைவான பயிற்சித் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்துமாறு பிரதமர் சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தியதுடன், தாதியர்களின் பதவிக் காலத்தை நீடிக்கும் பணியின் தற்போதைய நிலை குறித்து விசாரித்தார்.

தாதியர்களின் பதவிக்காலத்தை 63 வயது வரை நீடிப்பதற்கான அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவை அனுமதிக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச். முணசிங்க இதன்போது தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோயை எதிர்கொண்டு அனைத்து சுகாதார ஊழியர்களும் ஒரு சிறந்த சேவையைச் செய்து வருவதாக பிரதமர் நினைவு கூர்ந்ததோடு, அவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கேட்டார்.

சுகாதாரத் துறையிலுள்ள அனைவருக்கும் கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், அவர்களது குடும்பங்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்குவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்
சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் எஸ்.எச்.முணசிங்க தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் தாதியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு, முறையான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தாதியர் பட்டத்தை வழங்குவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் சுகாதார அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.

தாதியர் பட்டத்தை வழங்குவது தொடர்பான சட்ட வரைவுக்காக சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வரைபை பாராளுமன்றத்தில் விரைவாக சமர்ப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தாதியர்களின் சீருடைக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டதன் பின்னர் அது இதுவரை அதிகரிக்கப்படவில்லை என்றும், அக்கொடுப்பனவை அதிகரிக்குமாறும் முருத்தெட்டுவே ஆனந்த நாயக தேரர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பொதுவான முடிவை எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் எடுக்க முடியும் என்று பிரதமர் கூறினார்.

இக்கலந்துரையாடலில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, பிரதமர் பணிக்குழாமின் பிரதான யோஷித ராஜபக்ஷ, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எச். முணசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, அரச ஐக்கிய தாதியர் சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.ஏ.டி. கல்யாணி, பிரதித் தலைவர் ஆர்.கே. பட்டுவிட்ட, பிரதிச் செயலாளர் புஷ்பா ரம்யானி டி சொய்சா, கந்தானை தாதியர் கல்லூரியின் அதிபர் டபிள்யூ.ஏ. கீர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment