அரசாங்கம் சரியான நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தவறியுள்ளது, விவசாயிகள் தற்போது நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - சரத் பொன்சேகா - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

அரசாங்கம் சரியான நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தவறியுள்ளது, விவசாயிகள் தற்போது நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - சரத் பொன்சேகா

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தீர்மானங்களை அரசாங்கம் சரியான நேரத்தில் எடுக்கத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சரத் பொன்சேகா மேலும் கூறுகையில், இரசாயன உர நெருக்கடி நீண்ட வருடங்களாக இருக்கின்றது. சகல அரசாங்க காலத்திலும் அதனை இறக்குமதி செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது விவசாயிகள் பெரும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்னர். விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் மீறப்பட்டுள்ளன. அவர்கள் தற்போது நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனாவால் உயிர் அச்சுறுத்தலுடனேயே மக்கள் வாழ்கின்றனர். நாங்கள் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுக்கவில்லை. உலகளாவிய தொற்றாக இதனை அறிவித்த போது நாங்கள் இதன் பாரதூர தன்மையை புரிந்துகொள்ளவில்லை. 

குதிரை பாய்ந்து போன பின்னர் லாயம் மூடுவதை போன்றதாகவே செயற்பாடுகள் இருக்கின்றன. தடுப்பூசி திட்டத்தை அமெரிக்காவில் கடந்த வருடம் மே மாதத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளனர். இந்த நாட்டில் அதுபற்றி நாங்கள் கூறும் போது அதனை கணக்கில் எடுக்கவில்லை.

இப்போது அமெரிக்காவில் 55 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அங்கு அதனை அவர்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்துகின்றனர். இந்நிலையில் தற்போது அதிக விலைக்கு தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

நாட்டில் 06 இலட்சம் பேருக்கு இரண்டாவது தடுப்பூசி இல்லாமல் இருக்கின்றது. வாகனங்களில் வந்த செல்வந்தர்கள் 3,000 பேருக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அத்துடன் ஆயிரம் ரூபா பணம் கொடுத்து தடுப்பூசியை செலுத்தியவர்களும் உள்ளனர். இவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment