ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 69 பேர் தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 69 பேர் தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி

(எம்.எப்.எம்.பஸீர்)

தமது கட்சி உறுப்புரிமை நீக்கப்படுவதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 69 பேர் தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்காது உயர் நீதிமன்றம் நேற்று (08.06.2021) நிராகரித்தது.

உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலகொட, எல்.ரி.பி. தெஹிதெனிய மற்றும் எஸ். துறைராஜா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

குறித்த 69 மேன் முறையீட்டு மனுக்களும் நேற்று செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. குறித்த மனுக்களின் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும், பிரதிவாதியான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவும் ஆஜராகினர்.

மனு பரிசீலனையின் ஆரம்பத்திலேயே, அடிப்படை ஆட்சேபனம் ஒன்றினை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, மனுக்களுடன் முன் வைக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசி, உயர் நீதிமன்ற சட்ட திட்டங்களுக்கு முரணான வகையில் முன் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதன்படி, குறித்த மனுக்கள் உயர் நீதிமன்ற சட்ட திட்டங்களை கருத்திற் கொள்ளாது முன் வைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவற்றை விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதன்போது மன்றில், மனுதாரர்களான ஐ.தே.க.வின் உள்ளூராட்சி மன்ற பிரதி நிதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, குறித்த மனுக்களை மீளப் பெற்று, புதிதாக மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு மன்றை கோரினார்.

இந்நிலையிலேயே, குறித்த 69 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

No comments:

Post a Comment