கொரோனா பரவல் கட்டுப்படுத்தலில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபட்டால் மக்களின் அழிவை யாராலும் தடுக்க முடியாது - சார்ள்ஸ் நிர்மலநாதன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

கொரோனா பரவல் கட்டுப்படுத்தலில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபட்டால் மக்களின் அழிவை யாராலும் தடுக்க முடியாது - சார்ள்ஸ் நிர்மலநாதன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இந்தியா, அமெரிக்கா ,பிரிட்டனை எதிர்த்து சீனாவின் பக்கம் இலங்கை நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை இந்த நாடுகள் இலங்கைக்கு வழங்க முன்வருவதில்லையெனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கொரோனா தடுப்பூசிகள் மூலம் மேற்குலக நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால் இலங்கையால் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியாமைக்கு அரசின் இராஜதந்திர கொள்கையின் பலவீனமே காரணமாகியுள்ளது. 

முதலில் தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா பின்னர் வழங்க மறுத்து விட்டது. கொழும்புத் துறைமுக கடல் பகுதியில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்தபோது இலங்கை இந்தியாவின் உதவியைக் கேட்டது. ஆனால் இந்தியா முழு மனதுடன் உதவவில்லை. இந்தியா நினைத்திருந்தால் அந்தக் கப்பல் தீயைக்கட்டுப்படுத்தியிருக்க முடியும். இலங்கையின் வெளி உறவுக் கொள்கையின் தவறே இந்தியா இவ்வாறு வேண்டா வெறுப்பாக செயற்படக் காரணம்.

அத்தோடு, இலங்கையில் அரசினால் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையால் அடைந்த நன்மை என்ன? கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்ததா? கொரோனா உயிரிழப்புக்களை குறைக்க முடிந்ததா? பயணத் தடைக்கு மத்தியிலும் 60 வீத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

பணம் படைத்தவர்கள், அரசியல் செல்வாக்குள்ளவர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றனர். இந்தப் பயணத் தடையால் வறிய மக்களை பாதாளத்துக்குள் பிடித்து தள்ள மட்டுமே அரசினால் முடிந்தது.

சுகாதாரத் துறையினர் செய்ய வேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment