கொரோனா மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு - வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதிலும், தடுப்பூசி ஏற்றுவதிலும் 'பெயில்' : சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சியினர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

கொரோனா மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு - வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதிலும், தடுப்பூசி ஏற்றுவதிலும் 'பெயில்' : சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சியினர்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திலும், தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டிலும் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவலின் பாரதூரமான விளைவுகளை இன்னமும் அரசாங்கம் விளங்கிக் கொள்ளவில்லை என பிரதான எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், கொவிட்-19 வைரஸ் பரவலினால் நாட்டில் இடம்பெற்றுள்ள ஆயிரத்து எழுநூறுக்கும் அதிகமான மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் குற்றம் சுமத்தினர்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை, பிரதான எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட கொவிட்-19 வைரஸ் பரவல் அவசரகால நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதனை கூறினர்.

இது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்துக்கூறுகையில், நாட்டின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, நாடளாவிய ரீதியில் கொவிட் வைரஸ் தொற்று பரவிக்கொண்டுள்ளது. வீடுகளில் மக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளன. வீதிகளில் மரணங்கள் ஏற்படுகின்றன. 

வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் இடமில்லாத நிலையொன்று உருவாகியுள்ளது. இராணுவத் தளபதியும், அரசாங்கமும் கூறும் கதைகளை மக்கள் நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களை வீடுகளுக்குள் முடக்க பயணக்கட்டுப்பாட்டை பிறப்பித்துள்ளனர். மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திலும் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

நாட்டில் 10 வீதமான மக்களுக்கு கூட தடுப்பூசி ஏற்றப்படவில்லை. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு பாரிய பின்னடைவை கண்டுள்ளது. சுகாதார துறையினர், விசேட வைத்தியர்கள் நாட்டின் நிலைமை குறித்து எச்சரிக்கை விடுத்தும் அரசாங்கம் பணத்திற்காக நாட்டை முடக்காது கைவிட்டது.

ஆகவே இப்போது இலங்கையில் ஏற்பட்ட ஆயிரத்து எழுநூறுக்கு அதிகமான மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். மக்களுக்கு உணவு இல்லை, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

இந்நிலையில் ஐயாயிரம் ரூபாவை கொடுத்து மக்களை ஏமாற்றும் வேலையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டை முடக்கிவிட்டு நாட்டின் வளங்களை விற்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்றார்.

எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல விவாதத்தில் உரையாற்றும்போது கூறுகையில் ஜனவரி மாதத்தில் விமான நிலையங்களை மூடிய நாடுகள் அனைத்துமே தப்பித்துக் கொண்டுள்ளனர். ஆனால் நாம் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை வரவழைத்து நோயை பரப்பிக் கொண்டுள்ளோம்.

இறுதியாக எமக்கு தடுப்பூசியும் கிடைக்கவில்லை. தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் 'பெயில்', தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொள்வதிலும் 'பெயில்', ஆகவே நாட்டின் பிரச்சினைகளில் இருந்து மீள வேண்டும் என்றால் கடவுளின் அருள் மட்டுமே கிடைக்க வேண்டும். வேறு வழியேதும் இல்லை என்றார்.

விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா கூறுகையில் கொரோனா பரவல் நாட்டில் அச்சமொன்ரை உருவாக்கியுள்ளது. இதனை முறையாக கையாள்வதில் அரசாங்கம் தவறியுள்ளது. இந்த வைரஸின் பாரதூரமான தன்மையை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவில்லை.

அதுமட்டுமல்ல கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை கையாள்வதிலும் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

தடுப்பூசி ஏற்ற வேண்டும் என நாம் கூறிய வேளையில் அரசாங்கம் எம்மை விமர்சித்ததுடன், கேலி செய்தனர். ஆனால் இன்று அதனையே அரசாங்கம் முன்னெடுத்தாலும் அதனையும் முறையாக செய்யாது தவறிழைத்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment