இங்கிலாந்து, இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது - News View

Breaking

Post Top Ad

Thursday, June 24, 2021

இங்கிலாந்து, இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

நேற்றிரவு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து, இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை அணியானது மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதில் நேற்றிரவு கார்டீப், சோபியா கார்டியன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணி சார்பில் தசூன் சானக்க 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களையும் குசல் பெரேரா 30 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஏனைய வீரர்கள் சொதப்பலான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

129 என்ற இலகுவான இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப வீரர்களான ஜேசன் ரோய் மற்றும் ஜோஸ் பட்லர் நல்ல தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சுக்களை சமார்த்தியமாக கையாண்ட அவர்கள் 9 ஓவர்களில் இணைப்பாட்டமாக 80 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர் 10 ஆவது ஓவரின் முதல் பந்தில் ரோய் 36 ஓட்டங்களுடன் சாமரவின் பந்து வீச்சில் குணதிலக்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேவிட் மலனும் 7 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஜோனி பெயர்ஸ்டோவுடன் கைகோர்த்து பட்லர் அதிரடி காட்ட, இங்கிலாந்து 17.1 ஓவரில் 8 விக்கெட்டுகள் மீதமிருக்க இலங்கை நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

பட்லர் 55 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களையும், ஜோனி பெயர்ஸ்டோ 13 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக பட்லர் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதுடன், இரண்டாவது போட்டி இன்றிரவு அதே மைதானத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad