கனடாவில் முஸ்லிம் குடும்பம் மீது வாகனத்தை மோதவிட்டு படுகொலை : இனவெறி தாக்குதலாக இருக்கலாமென போலீசார் சந்தேகம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

கனடாவில் முஸ்லிம் குடும்பம் மீது வாகனத்தை மோதவிட்டு படுகொலை : இனவெறி தாக்குதலாக இருக்கலாமென போலீசார் சந்தேகம்

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டது இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் லண்டன் நகரில் உள்ள ஒரு பூங்காவுக்கு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்றுமுன்தினம் வீதி ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவர்கள் மீது காரை மோதினார். இதில் அவர்கள் வீதியில் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர்கள் தங்களுக்கு என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள் அந்த வாலிபர் மீண்டும் அவர்கள் மீது காரை ஏற்றினார். இதில் அவர்கள் கார் சக்கரங்களில் சிக்கி நசுங்கினர்.

இந்த கோர சம்பவத்தில் 74 மற்றும் 44 வயதான 2 பெண்கள், 46 வயதான ஒரு ஆண் மற்றும் 15 வயதான சிறுமி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேசமயம் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிர் தப்பினான்.‌அதனை தொடர்ந்து காரை மோதி தாக்குதல் நடத்திய அந்த வாலிபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார்.‌

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலையாளியை போலீசார் தேடினர். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 20 வயதான கனடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே முதற்கட்ட விசாரணையில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என தெரியவந்தது.‌ எனவே இது இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.‌ இதனால் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

2017ஆம் ஆண்டு க்யூபெக் பள்ளிவாசலில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு நடந்திருக்கும் மிக மோசமான தாக்குதலாகும் இது. முஸ்லிம்கள் என்பதற்காகவே அவர்கள் தாக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி பால் வைட் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad