தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை : போக்குவரத்து கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதி நீக்குவது பொருத்தமானதல்ல - எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை : போக்குவரத்து கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதி நீக்குவது பொருத்தமானதல்ல - எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக முழுநேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை என்பன குறைவடையவில்லை. அதற்கமைய முழுநேர போக்குவரத்தை கட்டுப்பாட்டின் பயனை நாம் பெறவில்லை. எனவே 14 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்குவது பொருத்தமானதல்ல என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

மாறாக 14 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படுமாயின் அது தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கும், நாடு பாரதூரமான நிலைக்குச் செல்வதற்கும் வழிவகுக்கும் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் சுட்டிக்காட்டினார்.

14 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளமை தற்போதுள்ள நிலைமைக்கு பொறுத்தமான தீர்மானமாகுமா என்று வினவியபோதே வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 90 வீதத்திற்கும் அதிகமான தனிநபர் இடைவெளியைப் பேணி கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரண்ங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே முழு நேர பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் இந்த கால கட்டத்தில் அதற்கான பலனை நாம் இன்னும் அனுபவிக்கவில்லை. 

காரணம் கடந்த இரு தினங்களாக 3000 தொற்றாளர்களும் 40 மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்த நிலைமைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை முறையான நெறிமுறையின் கீழ் வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டும். ஆனால் தற்போது அவ்வாறு வினைத்திறனான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை. 

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைத்தது. அதனை ஏற்று தற்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டங்கள் தொடர்பில் புதிய ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வினைத்திறனுடன் முன்னெடுத்தால் மரணங்களின் எண்ணிக்கையை 90 வீதத்தால் குறைக்க முடியும். மேலும் வைரஸ் பரவலையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். பொருளாதாரத்திலும் வீழ்ச்சியடையாமல் பேண முடியும். அவ்வாறில்லையெனில் இவை எதனையுமே செய்ய முடியாமல் போகும்.

இது மாத்திரமின்றி தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முக்கிய பங்கிளை வகிக்கின்றன. தற்போது நாளாந்தம் 21000 - 22000 பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இவற்றில் ஆரம்பத்தில் 1500 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் தற்போது 3000 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அதற்கேற்ப பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரித்தால் மாத்திரமே உண்மையான தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் இனங்காண முடியும். 

இதேபோன்று அபாயமற்ற பகுதிகளிலும் எழுமாறாக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரித்து அவற்றின் பாதுகாப்பான நிலைமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரே தடவையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்காமல் மாவட்டம், மாகாணம் என கட்டம் கட்டமாக போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். அவ்வாறின்றி முழு நேர போக்குவரத்து கட்டுப்பாட்டையும் நீக்கினால் அது மீண்டும் நாட்டை பாரதூரமான நிலைக்கு கொண்டு செல்லும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad