பொதுமக்கள் உயிரிழப்பதை கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் என நினைக்க வேண்டாம் - ஒக்சிஜன் பற்றாக்குறை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் அதிருப்தி - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

பொதுமக்கள் உயிரிழப்பதை கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் என நினைக்க வேண்டாம் - ஒக்சிஜன் பற்றாக்குறை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் அதிருப்தி

பொதுமக்கள் உயிரிழப்பதை கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் என நினைக்க வேண்டாம் என டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாக தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஒக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் அடுத்தடுத்து மரணம் அடைவதால், மருத்துவமனை நிர்வாகங்கள் திணறிவருகின்றன.

இந்நிலையில், மருத்துவ ஒக்சிஜன் பற்றாக்குறை மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லிக்கு உடனடியாக 490 மெட்ரிக் டன் ஒக்சிஜன் வழங்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

‘ஒக்சிஜன் டேங்கர்களையும் மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீடு ஏப்ரல் 20 ஆம் திகதி செய்யப்பட்டது. ஒரு நாள்கூட டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட சப்ளை கிடைக்கவில்லை. இந்த உத்தரவை செயல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடங்குவது குறித்து பரிசீலிப்போம்.

தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் உயிரிழப்பதை கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம் என நினைக்க வேண்டாம்’ என நீதிமன்றம் கடுமையாக கூறியது.

ஒக்சிஜன் பற்றாக்குறை மற்றும் சூழ்நிலை குறித்து அதிகாரிகள் திங்கட்கிழமை விளக்கம் அளிப்பார்கள் என்றும், உத்தரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

ஆனால், அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. ‘போதும் போதும், ஒதுக்கப்பட்டதை விட அதிகமாக யாரும் கேட்கவில்லை. இன்று நீங்கள் இந்த ஒதுக்கீட்டை வழங்க முடியாவிட்டால், உங்கள் விளக்கத்தை திங்களன்று கூறுங்கள்’ என நீதிமன்றம் தெரிவித்தது.

No comments:

Post a Comment