தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபைத் தேர்தல் நடாத்துவதற்குரிய வாய்ப்பு கிடைத்தும் ஒத்தி வைத்தார்கள் - அமைச்சர் டக்ளஸ் - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபைத் தேர்தல் நடாத்துவதற்குரிய வாய்ப்பு கிடைத்தும் ஒத்தி வைத்தார்கள் - அமைச்சர் டக்ளஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கொண்டு வரப்பட்ட அரசாங்கத்திற்கு மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்குரிய வாய்ப்பு கிடைத்த போதும் அவர்கள் தேர்தலை ஒத்தி வைத்தார்கள். ஆனால் எங்களுடைய அரசாங்கத்தை பொறுத்த வரை தேர்தலை எந்தளவு விரைவாக நடாத்தலாமோ அந்தளவு விரைவாக நடாத்துவதுதான் நோக்கமும் கொள்கையுமாக இருக்கின்றது என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு நேற்று (02) வருகை தந்திருந்த அவர், மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளரினால் கேட்கப்பட்டபோது, ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அந்த வகையில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், கொரோனாவை ஒரு காரணமாக வைத்துக் கொள்ளலாம்.

கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தலின் போதும், பாராளுமன்ற தேர்தலின் போதும் கொரோனா பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. இன்று இத்தொற்று நோய் அதிக பிரச்சினையாக உள்ளமையால் அதனை கருத்தில் எடுக்க வேண்டும். அதனை விட புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா தேர்தல் நடாத்துவதா என்ற முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பான கலந்துரையாடல்கள் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.

புதிய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தாலும் அல்லது பழைய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. ஏனென்றால் இது தொடர்பான சட்டத்தை திருத்த வேண்டும்.

பழைய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தால் அதற்கு காலம் போகாது. ஆனால் புதிய முறையில் தேர்தல் நடாத்துவதாக இருந்தால் எல்லை நிர்ணய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கு நிறைய காலம் எடுக்கும்.

சிலவேளைகளில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது மாத்திரமல்லாது சர்வஜன வாக்கெடுப்பிற்கும் போக வேண்டி வரும். அதன் அடிப்படையில் அரசாங்கம் தமக்குள்ளேயும், எதிர்தரப்பினருடனும் கலந்துரையாடி வருகின்றனர். இந்த தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad