தேவையேற்படின் வெளிநாடுகளிலிருந்தும் விசேட நிபுணர்கள் அழைக்கப்படுவர், எமது நாட்டின் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு கப்பல் நிறுவனவே பொறுப்புகூற வேண்டும் - அமைச்சர் மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

தேவையேற்படின் வெளிநாடுகளிலிருந்தும் விசேட நிபுணர்கள் அழைக்கப்படுவர், எமது நாட்டின் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு கப்பல் நிறுவனவே பொறுப்புகூற வேண்டும் - அமைச்சர் மஹிந்த அமரவீர

(எம்.மனோசித்ரா)

தீ விபத்திற்குள்ளாகியுள்ள கப்பலால் நாட்டின் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு பல வருடங்கள் முகங்கொடுக்க நேரிடும். இந்த பாதிப்புக்கள் தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக தேவையேற்படின் வெளிநாடுகளிலிருந்தும் விசேட நிபுணர்கள் அழைக்கப்படுவர் எவ்வாறிருப்பினும் எமது நாட்டின் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு குறித்த கப்பல் நிறுவனவே பொறுப்புகூற வேண்டும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நீர்கொழும்பு கடற்கரை பகுதிக்கு நேற்று வியாழக்கிழமை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், தீவிபத்திற்குள்ளாகியுள்ள எஸ்க்பிரஸ் பேர்ல் கப்பலால் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு குறித்த கப்பலுக்கு உரித்துடைய நிறுவனமே பொறுப்புகூற வேண்டும். அவர்கள் பக்கத்தில் ஏற்பட்ட தவறின் காரணமாகவே எமது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில் மதிப்பீடு செய்து, அதற்கான நஷ்டஈட்டினை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதனை விட எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கே முன்னுரிமையளிக்க வேண்டும்.

அத்தோடு இதனால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர் உள்ளிட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. அத்தோடு இதன்மூலம் எமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் நீண்ட காலத்திற்கு தொடரக்கூடும். பல வருடங்களுக்கு நாம் இந்த பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

இவை தொடர்பில் மதிப்பீடு செயற்வதற்காக உள்நாட்டிலுள்ள துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும். அத்தோடு தேவை ஏற்படின் வெளிநாட்டிலுள்ள விசேட நிபுணர்களையும் அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவற்றுக்கான செலவுகளை குறித்த கப்பல் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றாடலை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய அதிக பட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment