தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது - இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது - இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர

(இராஜதுரை ஹஷான்)

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கவே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தெரவித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று இணைய வழியூடாக இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காலத்தில் இருந்து மே தின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த முடியாத துரதிஷ்ட நிலை ஏற்பட்டது.

இம்முறை மே தின கூட்டத்தை வெகுவிமர்சையாக நடத்த திட்டமிட்டிருந்தோம். புத்தாண்டு கொவிட் கொத்தணியின் காரணமாக உழைக்கும் வரக்கத்தினரை ஒன்றினைத்து கூட்டங்களை நடத்த முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் ஒரு நாடு - ஒரு சட்டம், அனைவருக்கும் சமவுரிமை என்ற இலக்கிற்கு அமைய இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுகிறது.

நாட்டு மக்கள் அனைவரும் பொது சட்டத்தை பின்பற்ற வேண்டும். பொது சட்டத்திற்கு புறம்பாக ஒரு தரப்பினர் செயற்படும் போது முரண்பாடுகள் மாத்திரம் தோற்றம் பெறும்.

தமிழ் பிரிவினைவாதம் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட்டதால் பாரிய விளைவுகள் நாட்டில் தோற்றம் பெற்றது.

30 வருட கால யுத்தம் பல்வேறு தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை நாட்டிலிருந்து இல்லாதொழித்தார்.

தமிழ் பிரிவினைவாதத்தை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது. இதன் விளைவை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின்ஊடாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு இதற்காகவே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள்.

அரசியல் நோக்கங்களினால் முடக்கப்பட்டிருந்த தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்துள்ளோம். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த உழைக்கும் வர்க்கத்தினர் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இன்று பல்வேறு சவால்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தோற்றம் பெற்றுள்ளன. சவால்களை வெற்றி கொள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad