மக்களே அவதானம்...! இலங்கையில் 5 திரிபடைந்த கொரோனா வைரஸ்கள் பல மாவட்டங்களில் அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

மக்களே அவதானம்...! இலங்கையில் 5 திரிபடைந்த கொரோனா வைரஸ்கள் பல மாவட்டங்களில் அடையாளம்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, இந்தியாவில் பரவும் பி.1.617 (B.1.617) வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபரொருவரின் மாதிரியில் இந்த வைரஸ் இனங்காணப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் பிரித்தானியா, டென்மார்க், மத்திய கிழக்கு நாடுகள், நைஜீரியா மற்றும் தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இனங்காணப்பட்டுள்ள 5 வகையான வெவ்வேறு வைரஸ்கள் நாட்டின் பல பகுதிகளிலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

பி.1.1.7, பி.1.428, பி.1.525, பி.1.617 மற்றும் பி.1.351 ஆகிய வைரஸ்களே இவ்வாறு இனங்காணப்பட்டவையாகும். இது தவிர உள்நாட்டில் பி.1.411 என்ற வைரசும் இனங்காணப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள வைரஸ்கள் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பீடத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே மற்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

பி.1.1.7. வைரஸ்
பி.1.1.7. என்ற வைரஸானது பிரித்தானியாவில் பரவிய வைரஸாகும். இவ்வைரஸானது இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஹோமாகம, பொலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளது. 

இந்த வைரஸ் கொழும்பில் மாத்திரமின்றி குருணாகல் மாவட்டத்தில் பொல்பிட்டிகம, குளியாப்பிட்டி, நிக்கவரெட்டிய, கனேவத்த, அம்பலன்பொல, கிரிஉல்ல, பன்னல, வாரியபொல ஆகிய பகுதிகளிலும் கண்டுபிடிப்பட்டுள்ளது.

இதேபோன்று களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, பிம்புர, பாணந்துரை, பலிந்தருவ, பண்டாரகம ஆகிய பகுதிகளிலும் , கண்டி மாவட்டத்தில் பண்டுவஸ்நுவர, கண்டி மற்றும் ஹிங்குராங்கொட ஆகிய பகுதிகளிலும், பொலன்னறுவை மாவட்டத்தில் மெதகிரிய பகுதியிலும் , மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர் பகுதியிலும் இந்த வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது.

பி.1.428 வைரஸ்
இதேவேளை டென்மார்க், ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இனங்காணப்பட்ட பி.1.428 என்ற வைரஸானது யாழ்ப்பாணத்தில் குறிப்பாக நல்லூரில் உருவாகிய கொத்தணிகளில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் மாதிரிகளில் கண்டு பிடிக்கப்பட்டது.

பி.1.525 வைரஸ்
நைஜீரியாவில் பரவிய பி.1.525 வைரஸானது பண்டாரகம மற்றும் கொழும்பில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பி.1.617 வைரஸ்
பி.1.617 வைரஸானது இந்தியாவில் பரவும் வைரஸாகும். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரியில் இந்த வைரஸ் நேற்று இனங்காணப்பட்டுள்ளது.

பி.1.351 வைரஸ்
தென் ஆபிரிகாவில் பரவிய பி.1.351 வைரஸானது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரியில் இனங்காணப்பட்டுள்ளது.

பி.1.411 வைரஸ்
பி.1.411 என்ற வைரஸ் இலங்கையில் இனங்காணப்பட்டதாகும். இவ்வைரஸ் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இனங்காணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment