கொவிட் பரவலை கட்டுப்படுத்த அரசு வலுவான நடவடிக்கை, படுக்கைகளின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரிப்பு, தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு மாற்று வழி, PCR பரிசோதனை அதிகரிப்பு என்கிறார் அமைச்சர் ரமேஷ் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 5, 2021

கொவிட் பரவலை கட்டுப்படுத்த அரசு வலுவான நடவடிக்கை, படுக்கைகளின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரிப்பு, தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு மாற்று வழி, PCR பரிசோதனை அதிகரிப்பு என்கிறார் அமைச்சர் ரமேஷ்

கொவிட் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையும், ஜனாதிபதி செயலணியும் மிகவும் திட்டமிட்ட மற்றும் வலுவான முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை 4,000 - 5,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டாக்டர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) கவனம் செலுத்தி வருவதாகவும், எதிர்காலத்தில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்த அவர் PCR பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், முதலாவது தடுப்பூசி எமது நாட்டுக்கு கிடைத்த போது தடுப்பூசி உற்பத்தி செய்த இந்திய கம்பனி மற்றும் இந்திய நிலைமை இன்றைய நிலையை விட மாற்றமாக இருந்தது. இரண்டாவது தடுப்பூசிகளை நம் நாட்டிற்கு வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தனர். மேலும் தற்போது நாட்டில் 345,000 தடுப்பூசிகள் உள்ளன என்றும் அவர் கூறினார். 

கூடுதலாக, கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கிய சில நாடுகளில் அவை மேலதிகமாக இருப்பதாகவும், அந்த நாடுகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் மேலதிக தடுப்பூசியை உடனடி கொள்முதலாக வாங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து உலக சுகாதார அமைப்பு அவதானம் செலுத்தி வருவதாகவும், முதல் டோஸை ஒரு வகையிலும் இரண்டாவது டோஸை மற்றொரு வகையிலும் கொடுக்க முடியுமா என்று ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையுடன், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படலாம் என்று அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

இதேவேளை PCR பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கொவிட் புதிய திரிபு கண்டறிப்பட்ட பின்னர் அரச ஆய்வு கூடங்களில் கொவிட் PCR பரிசோதனைக்கான கேள்வி நாளொன்றுக்கு 20,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு. 

அதனால் குறித்த தேவைக்கான PCR பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

அடுத்த சில நாட்களில் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறைகளிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பை போன்று பொதுமக்களின் ஆதரவும் தேவை என்றும் அமைச்சர் மேலும் கூறினார். 

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad