அரசாங்கம் நியாயம் வழங்கி விட்டதாக காண்பிக்கவே நாடகம் அரங்கேற்றம் ! திருப்தியளிக்கிறதா என்று பேராயரிடம் கேட்கிறார் சமிந்த விஜேசிறி - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

அரசாங்கம் நியாயம் வழங்கி விட்டதாக காண்பிக்கவே நாடகம் அரங்கேற்றம் ! திருப்தியளிக்கிறதா என்று பேராயரிடம் கேட்கிறார் சமிந்த விஜேசிறி

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனக்குறிப்பிட்டு நௌபர் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளமை திருப்தியளிக்கிறதா என்று பேராயரிடம் கேட்க விரும்புகின்றோம். இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் நியாயம் வழங்கி விட்டதாகக் காண்பிப்பதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனக் குறிப்பிட்டு நௌபர் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளமையால் திருப்தியடைந்துள்ளீர்களா என்று பேராயரிடம் கேட்க விரும்புகின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு இரு தினங்களுக்குப் பின்னர் எமது அரசாங்கத்தில் நௌபர் மௌலவி கைது செய்யப்பட்டார்.

எனினும் இவர்தான் பிரதான சூத்திரதாரி என்ற கருத்து எங்கும் தெரிவிக்கப்படவில்லை. அத்தோடு இவர் உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுமில்லை. இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக இந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.

நௌபர் மௌலவி இதன் பிரதான சூத்திரதாரி என்பதை நம்ப முடியாது. இதன் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதே அரசாங்கத்தின் தேவையாகும். 21 ஆம் திகதிக்கு முன்னர் நியாயம் வழங்கப்பட்டுள்ள என்று காண்பித்து பேராயரை அமைதியாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காக சில மதகுருமார்களும் நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். எனவே அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றோம். இவ்வாறான நாடங்களில் ஏமாந்துவிட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad