இலங்கை பொலிசாரின் கடமையை எவ்வாறு யாழ் முதல்வரின் படையணி முன்னெடுக்க முடியும் - கேள்வி எழுப்பினார் கிங்ஸ் நெல்சன் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

இலங்கை பொலிசாரின் கடமையை எவ்வாறு யாழ் முதல்வரின் படையணி முன்னெடுக்க முடியும் - கேள்வி எழுப்பினார் கிங்ஸ் நெல்சன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஒரே நாடு ஒரே சட்டமென்றால் இலங்கை பொலிசாரின் கடமையை எவ்வாறு யாழ் முதல்வரின் படையணி முன்னெடுக்க முடியும். யாழ் மாநகர முதல்வரால் உருவாக்கப்பட்டுள்ள 'காவல்படை' பணிக்குழுவினருக்கான சீருடை புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்ததாக உள்ளதெனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் தெரிவித்தார்.

குறித்த முதல்வர் ஈ.பி.டி.பியின் முழுமையான ஆதரவுடன் வந்தவர் என்பதை கூட்டமைப்பின் சார்ல்ஸ் எம்.பி சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றம் முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில், சபை நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் ஒழுங்குப் பிரச்சினையொன்ற எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன், விசேட காரணி ஒன்றை முன்வைத்தார்.

"ஒரே நாடு, ஒரே சட்டமெனில் இந்நாட்டில் ஒரு பொலிசே செயற்பட வேண்டும். ஆனால் யாழ்ப்பாண முதல்வரால் தனியான பாதுகாப்புக் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ள பொலிசார் செய்ய வேண்டிய பணிகளை முழுமையாக அந்த படையணியே செய்கின்றது.

யாழ். நகரில் காவல்துறையினரால் முன்னெடுக்க வேண்டிய பணிகளை நேற்று முதல் அக்குழுதான் செய்கின்றது. போக்குவரத்து நெறிப்படுத்தலும் முதல்வரின் பாதுகாப்பு குழுவின் கீழ்தான் இடம்பெறுகின்றது. கடந்த காலங்களில் புலிகளின் காவல்துறை பிரிவு அணிந்திருந்த ஆடைக்கு நிகரான ஆடையையே இந்த குழுவும் அணிந்துள்ளது.

எனவே இது தொடர்பில் அரசு அறிந்துள்ளதா?, ஏனென்றால் இது பாரதூரமான விடயமாகும். இது குறித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரும் சபையில் உள்ளார், எனவே இது குறித்து ஆராய்ந்து பார்ப்பதே நல்லதென நினைக்கின்றேன் என்றார்.

இதன்போது பதில் தெரிவித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, தற்போது சபையில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இல்லை, இன்று மாலை பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தயவுசெய்து நீங்களும் இந்த கூட்டத்திற்கு வாருங்கள். அனைத்து அதிகாரிகளும் கூடத்திற்கு வருவார்கள். அவர்களிடம் இது குறித்து கேட்டறிந்துகொள்ள முடியும் என்றார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, குறித்த முதல்வர், ஈ.பி.டி.பியின் முழுமையான ஆதரவுடன் வந்த முதல்வரே. அவரே இப்போது நீங்கள் கூறிய விதத்தில் செயற்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment