உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை அறிந்திருந்தால், சந்திகளில் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது : அமைச்சர் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை அறிந்திருந்தால், சந்திகளில் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது : அமைச்சர் கெஹெலிய

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யாரென எதிர்க்கட்சியினர் அறிந்திருந்தால் குற்ற விசாரணைப் பிரிவில் அல்லது பயங்கரவாத தடுப்பு பிரிவில் முறைப்பாடளிக்க முடியும். அதனை விடுத்து சந்திகளில் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. பொலிஸ், குற்ற விசாரணைப் பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவையே அதனைச் செய்யும்.

இவற்றுக்கு நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அழுத்தம் பிரயோகிப்பதில்லை. இவற்றுக்கு சுயாதீனமாக இயங்கக் கூடிய வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஏன் கைது செய்யப்படவில்லை? அவரது சகோதரர் ஏன் கைது செய்யப்படவில்லை ? என எம்மிடம் கேட்கப்பட்டது. இது அரசாங்கத்தால் எடுக்கப்படும் தீர்மானம் அல்ல. மேற்கூறிய நிறுவனங்களே அது தொடர்பில் தீர்மானிக்கும்.

பாராளுமன்றத்தில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சூத்திரதாரியை கண்டு பிடிக்குமாறு கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சூத்திரதாரியை பற்றி தெரியும் என்பதே இதன் மூலம் வெளிப்படுகிறது. 

எனவே குறித்த உறுப்பினர்கள் இது தொடர்பில் அறிந்திருந்தால் குற்ற விசாரணைப் பிரிவு அல்லது பயங்ரவாத தடுப்பு பிரிவில் முறைப்பாடளிக்க முடியும். அதனை விடுத்து சந்திகளில் கூறிக் கொண்டிருப்பதால் எவ்வித பயனும் கிடையாது என்றார்.

No comments:

Post a Comment