விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் - போதைப் பொருள் விளைவுகளை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்த ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி : அமைச்சர் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 7, 2021

விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் - போதைப் பொருள் விளைவுகளை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்த ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி : அமைச்சர் சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்தாவிடின் வீதிக்கிறங்கி போராடுவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம். கத்தோலிக்க மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. குற்றவாளிகளை சட்டத்தில் முன்னிலைப்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுமக்கள் அச்சமின்றிய வகையில் வாழும் சூழலை ஏற்படுத்துவது ஜனாதிபதி கோத்தாபய ராஜக்ஷவின் எதிர்பார்ப்பாகும். இதற்காகவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது.

கடந்த காலத்தை காட்டிலும் தற்போது தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சேவையை ஒழுக்கமான முறையில் செயற்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தற்போது 491 பொலிஸ் நிலையங்கள் நாடு தழுவிய ரீதியில் காணப்படுகின்றன. மேலதிகமாக 197 பொலிஸ் நிலையங்களை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த அரசாங்கம் பல வழிமுறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் உள்ள போதைப் பொருள் பாவனையினை இல்லாதொழிக்க பாடசாலை மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவுப்படுத்த ஒரு பாடசாலையில் சேவையாற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்படும்.

ஒரு கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றம் என்பதை பாடசாலை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 

இலங்கைக்குள் போதைப் பொருள் கொண்டுவருவதை தடுக்க கடற்படையினர் விசேட திட்டங்களை தற்போது முன்னெடுத்துள்ளார்கள்.

கேள்வி - ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் கத்தோலிக்க மக்கள் வீதிக்கிறங்கி போராடுவதாக குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு ?

பதில் - போராட்டங்களில் ஈடுபடும் உரிமை அனைத்து தரப்பினருக்கும் உண்டு. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் சார்பில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிடும் கருத்துக்களை உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்த விசாரணை அறிக்கை, ஜனாதிபதி விசாரணை அறிக்கை, பாராளுமன்ற தெரிவு குழுவின் விசாரணை அறிக்கை ஆகிய அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சட்டமா அதிபர் உரிய நவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. ஆகவே விசாரணை அறிக்கைகள் மீதும், முன்னெடுப்பட்டுள்ள விசாரணைகள் மீதும் கத்தோலிக்க மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment