அலட்சியம் காட்டினால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என்கிறார் சுதர்ஷனி - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

அலட்சியம் காட்டினால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என்கிறார் சுதர்ஷனி

நாட்டு மக்கள் தொடர்ச்சியாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது தொடர்பில் அலட்சியம் காட்டினால் கடுமையான கட்டுப்பாடுகளை பிரயோகிக்க நேரிடும் என கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இக்காலங்களில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நிலையில், பொதுமக்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது முக்கியமென்றும் அவர் தெரிவித்தார். 

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், கடந்த புத்தாண்டு விடுமுறை காலத்தில் மாகாணங்களுக்கிடையில் பயணத் தடைகளை மேற்கொண்டிருந்தால் மக்கள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்தல் உள்ளிட்ட அநாவசியமான பயணங்களை தவிர்த்திருக்க வாய்ப்புண்டு.

அதேவேளை, சமய மற்றும் சுற்றுலா பிரதேசங்களில் மக்கள் அதிகளவில் கூடியுள்ளமையும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மே 31ம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சினால் புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை முழுமையாக பின்பற்றுவது மக்களின் பொறுப்பாகும். அதனைக் கணக்கிலெடுக்காமல் கடந்த விடுமுறையில் மக்கள் செயற்பட்டமையினாலேயே வைரஸ் பரவல் அதிகரிப்பு காணப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அதேவேளை கடந்த தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின் கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளில் புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட நிபுணரான கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 

அதற்கிணங்க பிரிட்டனில் பரவியுள்ள வைரஸ் இங்கு பரவுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவ்வாறில்லாவிட்டால் அது இலங்கையில் உருவான புதிய வகை வைரஸா என்பதை ஆராய்ச்சி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

அதேவேளை, இந்தியாவில் பரவும் வைரஸ் இலங்கையில் காணப்படுவதாக எந்தவொரு தகவலும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment