மாகாண சபையில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு - செந்தில், பிரபா, குருபரன் தலைமையில் கூடி ஆராய்வு - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

மாகாண சபையில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு - செந்தில், பிரபா, குருபரன் தலைமையில் கூடி ஆராய்வு

உத்தேச தேர்தல் முறை மாற்றத்திற்கிணங்க மாகாண சபைத் தேர்தலில் பாதிப்புக்குள்ளாக நேரும் சிறுபான்மை மக்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் யோசனைத் திட்டமொன்றை அரசாங்கத்திற்கு முன் வைப்பதற்கான தீர்மானமொன்றை தமிழ் சிறுபான்மை கட்சிகள் மேற்கொண்டுள்ளன.

அதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை உள்ளடக்கிய விதத்தில் இருபத்தைந்து தொகுதிகளை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த யோசனை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமானால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு யோசனை திட்டமொன்றை அரசாங்கத்திற்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கிணங்க அனைத்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைத்து அனைவரதும் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு காத்திரமான யோசனைத் திட்டமொன்றை தயாரித்து அதனை அரசாங்கத்திற்கு கையளிப்பதற்கான தீர்மானத்தை சிறுபான்மை கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மேற்கொண்டுள்ளனர் .

சிறுபான்மை கட்சிகள் சில இணைந்து நேற்றையதினம் அது தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்றை கொழும்பில் நடத்தின.

மேற்படி கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாகாண சபை அமைச்சரும் பிரதமரின் ஆலோசகருமான செந்தில் தொண்டமான், முன்னாள் பிரதியமைச்சரான பிரபா கணேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன், ராஜேந்திரன் கொஸ்தா, உட்பட சில தமிழ் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உச்ச அளவில் தக்கவைத்துக் கொள்வது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

எதிர்கொள்ள நேரும் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இதன்போது இ.தொ.கா. சார்பில் கலந்துகொண்ட முன்னாள் மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான் வலியுறுத்தினார்.

மாகாண சபைத் தேர்தலை 70 வீதம் தொகுதிவாரி 30 வீதம் விகிதாசார முறை என்ற ரீதியில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில் அது தொடர்பில் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆளும்கட்சி கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்போது அரசாங்கத்தின் தீர்மானத்தின்படி மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ் பிரததிநிதித்துவங்கள் பெருமளவு பாதிப்படையும் என சுட்டிக்காட்டப்பட்டது.

அதன்படி புதிய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும்போது சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் சம்பந்தமாக முன்னாள் மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டவர்கள் மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 

அது சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ள பிரதமர் சிறுபான்மை கட்சிகள் இணைந்து ஆலோசனைத் திட்டமொன்றை முன்வைத்தால் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கிணங்கவே நேற்றைய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் இதன்போது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். 

அனைத்து சிறுபான்மை கட்சிகளின் முக்கியஸ்தர்களையும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களையும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் அழைத்து இது தொடர்பில் தெளிவுபடுத்துவதுடன் அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவும் நேற்றைய இந்த கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டது.

நாட்டில் ஏற்கனவே 23 மாகாண சபை உறுப்பினர்கள் இருந்துள்ள நிலையில் புதிய தேர்தல் முறையின்படி அது நான்காக குறைவடையலாம் என்பது தொடர்பிலும் நேற்றைய தினம் ஆராயப்பட்டன. இந்த பெரும் பாதிப்பை நிவர்த்தி செய்யும் வகையில் புனிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  தீர்மானிக்கப்பட்டது. 

தமிழ் மக்களை இலக்குவைத்தே மாகாண சபை முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் பிரதிநிதித்துவம் இவ்வாறு குறைவடையுமானால் தேசிய ரீதியில் மட்டுமன்றி இந்தியா உட்பட சர்வதேச ரீதியிலும் அதற்கான கவனத்தை ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டிய அவசியம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad