ஏப்ரல் தாக்குதலின் முழுமையான அறிக்கையும், விசாரணைகளின் புதிய பெறுபேறுகளும் பாராமன்றிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை - ரணில் விக்ரமசிங்க - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

ஏப்ரல் தாக்குதலின் முழுமையான அறிக்கையும், விசாரணைகளின் புதிய பெறுபேறுகளும் பாராமன்றிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை - ரணில் விக்ரமசிங்க

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது முற்றிலும் தவறானது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான உண்மை காரணிகளையும், விசாரணை அறிக்கையினையும் நாட்டு மக்களுக்கு அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான புதிய தகவல்களை அரசாங்கம் இதுவரையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னோண்டோவை கைது செய்ய முயற்சிப்பதாக குறிப்பிடப்படும் விடயத்தில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்கதல் தொடர்பிலான கைது என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற விடயம் குறித்து கைது என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதனை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிரான செயற்பாடு என கருத வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விவகாரம் மற்றும் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற சம்பவம் என பிரித்து பார்க்க வேண்டும். இவ்விரு காரணிகளும் எவ்வாறு ஒன்றாக்கப்பட்டது என்பது சந்தேகத்திற்குரியது.

ஒரு விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கு இடையில் பிறிதொரு விடயத்திற்கு கவனம் செலுத்துவது வேறுப்பட்ட நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்த புதிய காரணிகளையும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து எமது ஆட்சிக் காலத்தில் திணைக்கள மட்டத்திலும் ஆணைக்குழு மட்டத்திலும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் தற்போதைய புதிய காரணிகள் காணப்படுமாயின் அரசாங்கம் அதனை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். ஏப்ரல் குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையும், விசாரணைகளின் புதிய பெறுபேறுகளும் பாராமன்றிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad