ஏப்ரல் 23 முதல் இரண்டாவது டோஸ் வழங்கப்படும், தேவைப்பாடுள்ள மேலதிக 5,67,000 தடுப்பூசிகளை பெற நடவடிக்கை - அமைச்சர் பவித்ரா - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

ஏப்ரல் 23 முதல் இரண்டாவது டோஸ் வழங்கப்படும், தேவைப்பாடுள்ள மேலதிக 5,67,000 தடுப்பூசிகளை பெற நடவடிக்கை - அமைச்சர் பவித்ரா

ஏப்ரல் 23ஆம் திகதி முதல் ஜுலை 06ஆம் திகதி வரை ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் வழங்கப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனவரி 29ஆம் திகதி முதல் ஏப்ரல் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் 9 இலட்சத்து 24 ஆயிரத்து 927 பேருக்கு முதல் தடுப்பூசியாக வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் பிரகாரம் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டு 12 வாரங்களின் பின்னர் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் போது மிகவும் வீரியமான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கப் பெறுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 23ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 6ஆம் திகதி வரை இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும். ஏப்ரல் 23ஆம் திகதியின் பின்னர் கட்டங்கட்டமாகவே இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும். இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்காக 3,56,730 தடுப்பூசிகள் தொற்று நோய் பிரிவிடம் கையிருப்பில் உள்ளன.

9,24,627 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியை தற்போதைய சூழலில் வழங்க வேண்டியுள்ளது. இரண்டாவது தடுப்பூசியை வழங்க கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக 5,67,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் தேவைப்படும். 

இந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உரிய துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறது. எதிர்வரும் வாரங்களில் குறித்த தடுப்பூசி தொகை கிடைக்கும். 

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் அனைத்தும் இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் மாத்திரமே பெற்றுக் கொள்ளப்படும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைத்த பின்னர் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து தேசிய ஒளடதங்கள் அதிகாரசபை தீர்மானிக்கும். 

தற்போது இந்த தடுப்பூசிகளை இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், 2023ஆம் ஆண்டு வரை தடுப்பூசிகளுக்கு ஆயுட்காலம் உள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment