ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலின் உண்மைகளை வெளிக்கொணரும் எதிர்க்கட்சியினரை அரசாங்கம் திட்டமிட்டு பழிவாங்குகிறது - அகில இலங்கை ஆயர்கள் சபைக்கு, ஐக்கிய மக்கள் சக்தி கடிதம் - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலின் உண்மைகளை வெளிக்கொணரும் எதிர்க்கட்சியினரை அரசாங்கம் திட்டமிட்டு பழிவாங்குகிறது - அகில இலங்கை ஆயர்கள் சபைக்கு, ஐக்கிய மக்கள் சக்தி கடிதம்

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் உண்மை காரணிகளையும், ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையினை முழுமையாக பகிரங்கப்படுத்துவதையும் விடுத்து அரசாங்கம் எதிர்த்தரப்பினரை திட்டமிட்டு பழிவாங்குகிறது. குண்டுத் தாக்குதலின் உண்மை தன்மையினையும், பிரதான சூத்திரதாரியையும் அறிந்து கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மை காரணியை வெளிக்கொண்டு வர எதிர்த்தரப்பினர் முன்னெடுக்கும் முயற்சிகள் தொடர்பில் அகில இலங்கை ஆயர்கள் சபையுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என கத்தோலிக்க ஆயர்கள் சபை தலைவருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலின் கொடூரம் மாறாத நிலையிலும், குண்டுத் தாக்குதலின் உண்மை சூத்திரதாரி கண்டறியப்படாமல் இருப்பது கவலைக்குரியன.

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முற்கூட்டிய தகவல்கள் கிடைத்திருந்தும் தாக்குதலை தடுக்க முடியாமல் இருந்தமைக்கான காரணம் என்ற என்ற கேள்வி நாட்டு மக்கள் மத்தியில் உள்ளது. குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி, உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் கத்தோலிக்க மக்கள் மாத்திரமல்ல ஒட்டு மொத்த மக்களும் அறிந்துகொள்வது அவசியமாகும். 

உண்மை காரணியை பகிரங்கப்படுத்துவதை விடுத்து, உண்மையினை பகிரங்கப்படுத்துமாறு போராடும் மக்கள் பிரதிநிதிகளையும், சிவில் அமைப்பினரையும் அரசாங்கம் திட்டமிட்டு பழிவாங்குகிறது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சாட்சியமளித்தவர்களின் சாட்சியங்கள் 30 ஆயிரம் பக்கங்களை உள்ளடக்கியுள்ளன.

457 சாட்சியாளர்களின் சாட்சியங்கள் 37314 பக்கங்களை உள்ளடக்கியுள்ளன. 86 சாட்சியங்களின் முதல் பகுதி மாத்திரமே பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புலனாய்வு பிரிவினர் வழங்கிய சாட்சியம் ஏதும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலை நடத்த குண்டுத்தாரி முயற்சித்த போது குண்டு செயற்படவில்லை. இதன் பின்னரே அந்த தாக்குதல்தாரி தெஹிவலை பகுதியில் தாக்குதலை நடத்தியுள்ளார் என தாக்குதல்தாரியின் மனைவி பொலிஸாருக்கும், ஆணைக்குழுவிற்கும் வழங்கிய சாட்சியம் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது. குண்டுத் தாக்குதல் தொடர்பிலான அனைத்து உண்மை விடயங்களையும் நாட்டு மக்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.

புனித செபஸ்தியன் தேவாலயத்தில் தாக்குதலை முன்னெடுத்த குண்டுதாரியான மொஹமட்ட ஹஸ்துனின் மனைவி என குறிப்பிடப்படும் சாரா என்பவர் இந்தியாவிற்கு தப்பி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இவரது சாட்சியம் குண்டுத் தாக்குதலின் உண்மை காரணியையும், உண்மை குற்றவாளியையும் கண்டறிவதற்கு முக்கியமானதாக அமையும். 

இந்த அடிப்படைவாத குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸ் சேவையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு முற்கூட்டியே புலனாய்வு பிரிவினர் அறியப்படுத்தியுள்ளதாக ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதி சஹ்ரான் உட்பட தவ்ஹீத் ஜமாத் மற்றும் அடிப்படைவாத முஸ்லிம்கள் 2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் அதாவது யுத்த காலத்திலும், அதற்கு பிறகும் புலனாய்வு பிரிவினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்கு அக்காலகட்டத்தில் சம்பளம் வழங்கப்பட்டது என்பதை தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களும், பிரதமரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தெரிவு செய்யப்பட்ட அடிப்படைவாதிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது என்பதை இதனூடாக தெரிந்துகொள்ள முடியும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ள மர்ம இரகசியத்தை வெளிக்கொண்டு வர எதிர்த்தரப்பினர் குரல் கொடுக்கிறார்கள். உண்மை காரணிகளை பகிரங்கப்படுத்துவதை விடுத்து அரசாங்கம் எதிர்த்தரப்பினரை அடக்க முயற்சிக்கிறது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அகில இலங்கை ஆயர்கள் சபையுடன் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும். அதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad