'பாதுகாப்புக்கான சூழல்' என்ற தொனிப்பொருளில் இலங்கையின் வன வளத்தை பாதுகாக்க 20 இலட்சம் மரக்கன்றுகளை நடும் பணி ஆரம்பம் - அமைச்சர் நிமல் லான்சா - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

'பாதுகாப்புக்கான சூழல்' என்ற தொனிப்பொருளில் இலங்கையின் வன வளத்தை பாதுகாக்க 20 இலட்சம் மரக்கன்றுகளை நடும் பணி ஆரம்பம் - அமைச்சர் நிமல் லான்சா

'பாதுகாப்புக்கான சூழல்' என்ற தொனிப்பொருளில் இலங்கையின் வன வளத்தை பாதுகாக்கும் நோக்கில் 20 இலட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளதாக கிராமியப்புற சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

தமிழ் சிங்கள புத்தாண்டின் சுபநேர பட்டியலின் பிரகாரம் எதிர்வரும் 16 ஆம் திகதி முற்பகல் 6.40 சுப நேரத்தில் றாகம போயிஸ்டவுன் பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மர நடுகை திட்டத்தின் ஆரம்பநிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷவின் ஆலோசனைகளின் பிரகாரம் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமைத்துவத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

'பாதுகாப்புக்கான சூழல்' திட்டத்தின் கீழ் நான்கு வருட காலத்தில் 20 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இதன் ஒரு கட்டமாக இந்த வருடத்தில் 5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்வின் ஆரம்ப வைபவம் வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கிராமியப்புற சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெளிவுப்படுத்தினார்.

அந்த வகையில் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் மரக்கன்றுகளையும், மகநெகும நிறுவனத்தினால் 50 ஆயிரம் மரக்கன்றுகளும், கிராமத்துடனான உரையாடல் திட்டத்தின் ஊடாக 14 ஆயிரத்து 22 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கும் 30 ஆயிரம் திட்டங்கள் ஊடாக 3 இலட்சம் மரக்கன்றுகளும் நாட்டப்படவுள்ளன.

விசேடமாக கம்பஹா மாவட்டத்தில் வன வளத்தின் குறைப்பாட்டினை ஈடுசெய்யும் வகையில் இந்த மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் மரக்கன்றுகளை நடும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

அத்தோடு இப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வீட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிர்ச் செய்கைகளுக்கான ஊக்குவிப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் நெடுஞ்சாலைகள் அமைச்சு, கிராமியப்புற சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகாரச்சபை மற்றும் மகநெகும நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புகள் இந்த திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment