ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இஸ்ரேலிய பிரதமர் உத்தியோகபூர்வ விஜயம் - சவூதி முடிக்குரிய இளவரசரை சந்திக்கும் வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 12, 2021

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இஸ்ரேலிய பிரதமர் உத்தியோகபூர்வ விஜயம் - சவூதி முடிக்குரிய இளவரசரை சந்திக்கும் வாய்ப்பு

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நேற்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கு சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானை சந்திப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலில் தீர்க்கமான பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய கிழக்கில் மற்றொரு இராஜதந்திர உறவுக்கு நெதன்யாகு முயன்று வருவதாக இஸ்ரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் விஜயம் செய்த நெதன்யாகு அபூதாபியில் முடிக்குரிய இளவரசர் செய்க் முஹமது பின் செயித் அல் நஹ்யாவை சந்திக்கவிருந்தார்.

சவூதி முடிக்குரிய இளவரசர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம் மேற்கொள்வது மற்றும் அவர் நெதன்யாகுவை சந்திப்பது தொடர்பில் சவூதி அரசு உறுதி செய்யவில்லை.

இஸ்ரேல் கடந்த செப்டெம்பரில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைனுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்திக் கொண்டது. 

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வானது கடந்த 70 ஆண்டுகளில் மூன்று மற்றும் நான்காவது அரபு நாடுகளுடனேயே இஸ்ரேல் உறவை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தின் பிறந்தகத்தைக் கொண்டதும் வளைகுடாவில் பலம்மிக்க நாடுமான சவூதி அரேபியா அண்டை நாடுகள் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தியதை ஊக்குவித்தபோதும் தான் இஸ்ரேலை தொடர்ந்து அங்கீகரிக்காத நிலைப்பாட்டையே பெற்றுள்ளது.

இஸ்ரேலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்காவது தேர்தல் நடைபெறவுள்ளதோடு அந்தத் தேர்தல் நெதன்யாகுவுக்கு சவால் மிக்கதாக பார்க்கப்படுகிறது. 

எனினும் விரைவான கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் மற்றும் வளைகுடா நாடுகளுடனான புதிய உறவுகள் மூலம் நெதன்யாகு தனது செல்வாக்கை அதிகரிக்க முயன்று வருகிறார்.

வரும் மார்ச் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தமக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை கேட்டுக்கொண்ட நெதன்யாகு, பிராந்தியத்தில் தம்மால் மேலும் அமைதி உடன்படிக்கைகளை எட்ட முடியும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். 

கடந்த செவ்வாய்க்கிழமை இராணுவ வானொலிக்கு அளித்த பேட்டியிலேயே நெதன்யாகு இதனைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment