தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய இலங்கை அணியின் லக்ஷான் சந்தகன் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய இலங்கை அணியின் லக்ஷான் சந்தகன்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள புதிய ரி 20 பந்து வீச்சாளர்கள் வரிசையில், இலங்கை அணியின் லக்ஷான் சந்தகன் 10ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கின்றார்.

நடைபெற்று முடிந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி 20 தொடரினை அடுத்து ஐ.சி.சி. ரி 20 பந்து வீச்சாளர்களுக்கான புதிய தர வரிசையினை வெளியிட்டிருக்கின்றது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த தர வரிசையில் சைனமன் பந்து வீச்சாளரான லக்ஷான் சந்தகன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தான் வெளிப்படுத்திய அசத்தல் பந்து வீச்சினை அடுத்தே முன்னேற்றம் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

லக்ஷான் சந்தகன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ரி 20 தொடரில் 6 விக்கெட்டுக்களை மொத்தமாக கைப்பற்றியிருந்ததோடு, இந்த விக்கெட்டுக்களின் துணையுடன் தற்போது 09 இடங்கள் முன்னேறி ஐ.சி.சி. இன் ரி 20 பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் 10ஆம் இடத்தினைப் பெற்றிருக்கின்றார்.

ரி 20 பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் வீரரான ரஷீட் கான் காணப்பட, தென்னாபிரிக்க அணியின் தப்ரைஸ் சம்ஷி இரண்டாம் இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணியின் ஏனைய சுழல்வீரர் முஜிபுர் ரஹ்மான் மூன்றாம் இடத்திலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய - நியூசிலாந்து அணிகள் இடையிலான ரி 20 தொடரில் சிறந்த பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்த அவுஸ்திரேலிய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்டன் ஏகார் 04 இடங்கள் முன்னேறி, தற்போது 04ஆம் இடத்தினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளரான ஆதில் ரஷீட், ஐ.சி.சி. இன் ரி 20 பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் 05ஆம் இடத்தில் காணப்படுகின்றார். 06ஆம் இடத்தினை அவுஸ்திரேலிய வீரரான அடம் ஷம்பா பெற்றுள்ளார்.

இவர்கள் தவிர ஐ.சி.சி. இன் ரி 20 பந்து வீச்சாளர்களுக்கான தர வரிசையில் முறையே 07ஆம், 08ஆம், 09ஆம் இடங்களில் நியூசிலாந்து அணியின் மிச்செல் சான்ட்னர், இஸ் சோதி மற்றும் டிம் செளத்தி ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரி 20 பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளையும் சேர்ந்த வீரர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad