வேலைவாய்ப்பின்மையை குறைக்க உள்ளூர் கைத்தொழில் ஊக்குவிப்பு - வேலைத்திட்டம் வகுத்து அரசு செயற்படுகிறது என்கிறார் அமைச்சர் பந்துல - News View

Breaking

Post Top Ad

Friday, March 12, 2021

வேலைவாய்ப்பின்மையை குறைக்க உள்ளூர் கைத்தொழில் ஊக்குவிப்பு - வேலைத்திட்டம் வகுத்து அரசு செயற்படுகிறது என்கிறார் அமைச்சர் பந்துல

வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்காக உள்ளூர் கைத்தறித் தொழிலை ஊக்குவித்து பொருளாதாரத்தை பலப்படுத்த அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மேல் மாகாண கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் கைத்தறித் தொழில் விஜயன் - குவேனி காலத்திற்கு முந்தைய ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. நாங்கள் பருத்தியை பயிரிட்டு அதிலிருந்து நூலை தயாரித்த ஒரு நாடு. 

1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்துப் பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டதால் இந்தத் தொழில்துறை பாதிக்கப்பட்டது. 

இறக்குமதி காரணமாக நாட்டில் இத்தகைய பல தொழில்கள் படிப்படியாக சரிந்தன. தனது வீட்டில் சுயதொழில் புரிந்த கிராமப்புற பெண் ஒருவர் அந்தத் தொழில் சரிவுடன் ஒரு ஆடைத் தொழிற்சாலையின் இயந்திரங்களுடன் பழக்கமாகிவிட்டார்.

1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் உள்ளூர் தொழில்களை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை வகுத்து உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்க முன்முயற்சி எடுத்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தில் நாட்டின் வளங்களையும் மக்களையும் பெரிதும் அரசாங்கம் நம்பியிருப்பதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தையும் உற்பத்தி செய்வும், உற்பத்தி செய்ய முடியாத ஒரு சிலவற்றை மட்டுமே இறக்குமதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டை சர்வதேச அளவில் வெற்றிபெறச் செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்காக உள்ளூர் கைத்தறித் தொழிலை ஊக்குவித்து பொருளாதாரத்தை பலப்படுத்தவும் அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை வகுத்துள்ளது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad