காத்தான்குடி வைத்தியசாலையை வழமையான சிகிச்சைகளுக்காக திறப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து தாருங்கள் - நஸீர் அஹமட்டிடம் வேண்டுகோள் விடுத்தார் வைத்தியர் ஜாபிர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

காத்தான்குடி வைத்தியசாலையை வழமையான சிகிச்சைகளுக்காக திறப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து தாருங்கள் - நஸீர் அஹமட்டிடம் வேண்டுகோள் விடுத்தார் வைத்தியர் ஜாபிர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பிரதேச மக்களின் நன்மை கருதி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அதன் வழமையான சிகிச்சைகளை நடத்திச் செல்ல ஏற்பாடுகளைச் செய்து தருமாறு காத்தான்குடி தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவரும் அவ்வைத்தியசாலையின் அத்தியட்சகருமான வைத்தியர் எம்.எஸ்.எம். ஜாபிர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட்டின் கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது விடயமாக மேலும் தெரிவித்த வைத்திய அத்தியட்சகர் ஜாபிர் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கடந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து விஷே‪ட கொரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவாக செயற்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் முதலாம் அலை தணிந்திருந்த கடந்த வருடத்தின் ஜுன் தொடக்கம் இரண்டாம் அலை உருவாகிய ஒக்ரோபர் வரையில் ஒரு சில மாதங்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அதன் வழமையாக சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கக் கூடியதாகவிருந்தது.

எனினும் இரண்டாம் அலை உருவான ஒக்ரோபர் மாதம் தொடக்கம் அவ்வைத்தியசாலை மீண்டும் அதன் வழமையான சேவைகளை நிறுத்தி தற்போது வரை விஷே‪ட கொரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவாக செயற்பட்டு வருகிறது.

இதேவேளை இவ்வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து தற்போது மார்ச் வரை சுமார் 15 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மாத்திரம் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதேவேளை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய 50 படுக்கை வசதிகளைக்கொண்ட பிரிவு இவ்வைத்தியசாலையின் வளாகத்தில் சுமார் 200 மீற்றர் தூரத்தில் உள்ளது.

ஆகையினால் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி போதிய இடவசதி உள்ள இவ்வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கும் ஒரு புறம் சிகிச்சையளிக்கின்ற அதேவேளை ஏனைய நோயாளர் சிகிச்சைகளையும் இங்கு ஆரம்பிக்க முடியும்.

எனவே பிரதேச மக்களின் நன்மை கருதி அனைத்து விதமான சுகாதார வைத்திய சேவைகளையும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்க ஆவன செய்ய வேண்டும்.” என்றார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் இந்த விடயம் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்படும்” என்றார்.

கொரோனா வைரஸ் முதலாம் அலை பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு இலங்கையின் நாலாபுறங்களிலுமிருந்தும் கொண்டு வரப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் விஷே‪ட கொரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment