இலங்கையை வந்தடைந்த சீனாவின் தடுப்பூசிகள் - விமான நிலையத்தில் உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

இலங்கையை வந்தடைந்த சீனாவின் தடுப்பூசிகள் - விமான நிலையத்தில் உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட, சீன தயாரிப்பு கொவிட்-19 தடுப்பூசியான சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசியின் 600,000 டோஸ்கள் இன்று (31) பிற்பகல் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால், சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் இடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய, சீனத் தூதுவர் ச்சீ ஜென்ஹோங் (Qi Zhenhong) கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதியிடம் அதனை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

சீனாவின் பீஜிங் நகரிலுள்ள சினோபார்ம் எனும் பயோடெக் மருந்து நிறுவனத்தினால் குறித்த கொவிட்-19 தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 869, குறித்த 600,000 டோஸ் தடுப்பூசிகளுடன், இன்று (31) முற்பகல் 11.28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

இத்தடுப்பூசி விமானத்தின் விசேட குளிரூட்டல் சேமிப்பகத்தில் சேமிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டதுடன், விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமான சரக்குகள் குளிரூட்டல் சேமிப்பகத்தில் சேமிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து குளிரூட்டிகளுடனான வாகனங்கள் மூலம் சுகாதார அமைச்சின் மத்திய தடுப்பூசி சேமிப்பு வளாகத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசிகள் முதற் கட்டமாக, இலங்கையிலுள்ள சீன நாட்டவருக்கு வழங்கப்படவுள்ளதுடன், எதர்வரும் திங்கட்கிழமை (05) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

அதனைத் தொடர்ந்தும் நிபுணர்கள் குழுவின் ஆய்வின் பின்னர் இலங்கையர்களுக்கு வழங்கப்படுமென, ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த 600,000 தடுப்பூசி தொகுதிகளும் ஒப்படைப்பட்டமை தொடர்பான ஆவணங்களில் சீனத் தூதர் ச்சீ ஜென்ஹோங் மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜயசுமண் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் வெளிவிவாகர அமைச்சர் தினேஷ் குணவர்தன, விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே, தாரக பாலசூரிய, சீன விசேட தூதுவர் குழுவினர், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கலாநிதி பேராசரியர் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ முனசிங்க, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவன தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி உள்ளிட்டோர் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவு பிரதானிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad