எனது இணைப்புச் செயலாளரின் மருத்துவ செலவுக்கு பணமில்லை, ஆனால் அரசாங்கம் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கி வழிநடத்தியுள்ளது - இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாத செயல்களை அனுமதித்ததில்லை : கபீர் ஹாசிம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

எனது இணைப்புச் செயலாளரின் மருத்துவ செலவுக்கு பணமில்லை, ஆனால் அரசாங்கம் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கி வழிநடத்தியுள்ளது - இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாத செயல்களை அனுமதித்ததில்லை : கபீர் ஹாசிம்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கி வழிநடத்தி இருக்கின்றது. சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருந்தார். அத்துடன் இந்த தாக்குதலால் நன்மை அடைந்தவர்களே இதன் உண்மை நிலைமைகளை மறைக்க முயற்சிக்கின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே முஸ்லிம்கள் இருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு தொடர்பாக தகவல் வழங்கிய காரணத்துக்காக சஹ்ரானின் குண்டர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகிய எனது இணைப்புச் செயலாளர் படுகாயமடைந்து சுயநினைவு இழந்திருக்கின்றார்.

அவருக்கு எனது சொந்த செலவில் மருத்துவம் செய்துவந்தேன். தற்போதும் அவர் நாட்டு வைத்தியம் செய்துவருகின்றார். அவரின் செயலை மதித்து சிங்கள இளைஞர்கள் அவருக்கு வீடொன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளனர்.

அவரின் மருத்துவ செலவுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என நான் அரசாங்கத்திடம் கேட்டிருந்தேன். எந்த பதிலும் வழங்கவில்லை. ஆனால் அவரை குணப்படுத்த வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் நிதி உதவி செய்ய வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலும் உயிருத்த ஞாயிறு தாக்குதல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது கத்தோலிக்க மக்களாகும். அதேபோன்று பாரிய நெருக்கடிகளுக்கு ஆளாகியது முஸ்லிம் மக்களாகும்.

சஹ்ரானின் நடவடிக்கைக்கும் இஸ்லாம் மார்க்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாம் ஒருபோதும் இவ்வாறான செயல்களை அனுமதித்ததில்லை.

மேலும் எனது இணைப்புச் செயலாளரின் மருத்துவ செலவுக்கு பணம் வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கேட்டபோது அதற்கு செலவிடவில்லை.

ஆனால் அரசாங்கம் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கி வழிநடத்தி இருக்கின்றது. சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருந்தார். அப்படியென்றால் அப்போதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு அறிவுறுத்தியே வழங்கியிருக்க வேண்டும்.

அதேபோன்று 2011ஆம் ஆண்டில் இருந்து சஹ்ரானின் நடவடிக்கை தொடர்பாக முஸ்லிம் அமைப்புகள் முறைப்பாடு செய்திருக்கின்றன. ஆனால் அப்போதை அரசாங்கத்தினால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தது கோத்தாபய ராஜபக்ஷ் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

மேலும் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி காேத்தாபய ராஜபக்ஷ்வை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக நாமல் குமார செய்த முறைப்பாடு தொடர்பாக இன்று எந்த விசாரணையும் இடம்பெறுவதில்லை.

நாமல் குமாரவின் இந்த முறைப்பாடு காரணமாகத்தான் சஹ்ரான் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸ் அதிகாரி நாலக்க சில்வா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நாமல் குமாரவின் அந்த முறைப்பாடு இல்லாமல் இருந்திருந்தால் சஹ்ரான் கைதுசெய்யப்பட்டிருப்பார்.

எனவே இந்த தாக்குதலின் பின்னால் யார் இருக்கின்றார் என்பதை கண்டறிய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே முஸ்லிம் மக்களும் இருக்கின்றனர். அதனால் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக கர்தினால் மெல்கம் ரன்ஜித்தின் நிலைப்பாட்டுக்கு நாங்களும் ஆதரவளிக்கின்றோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad