எம்மால் அரசாங்கத்தின் கட்டளையை மீற முடியாது, ஆயிரம் ரூபாவை கொடுத்தால் ஏனைய கொடுப்பனவுகள் சலுகைகள் இல்லை, கூட்டு ஒப்பந்தத்தை நிராகரிக்கவும் நேரிடும் : முதலாளிமார் சம்மேளனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

எம்மால் அரசாங்கத்தின் கட்டளையை மீற முடியாது, ஆயிரம் ரூபாவை கொடுத்தால் ஏனைய கொடுப்பனவுகள் சலுகைகள் இல்லை, கூட்டு ஒப்பந்தத்தை நிராகரிக்கவும் நேரிடும் : முதலாளிமார் சம்மேளனம்

(ஆர்.யசி)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக ஆயிரம் ரூபாவை கொடுத்தால் அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் ஏனைய விசேட சலுகைகளையும் வழங்க முடியாது போகும். இப்போது கொண்டுவந்துள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் கூட்டு ஒப்பந்தத்தை நிராகரிக்க நேரிடும். எனவே தோட்டங்களை நிருவகிக்கும் மாற்று வேலைத்திட்டத்தை கம்பனிகள் முன்னெடுக்கும். இதனால் தோட்டத் தொழிலாளர்களே பாதிக்கப்படுவார்கள் என முதலாளிமார் சம்மேளனம் கூறுகின்றது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபை வலியுறுத்தியதற்கு அமைய தற்போது அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் பெருந்தோட்ட கம்பனிகளின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவை வழங்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ள காரணத்தினால் எம்மால் அரசாங்கத்தின் கட்டளையை மீற முடியாது, நாம் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு எமது தரப்பு நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்துள்ளோம்.

ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவு சாத்தியமான ஒன்றல்ல என்பதே எமது நிலைப்பாடு. ஆயிரம் ரூபா வழங்க முடியாது அதற்கு இணக்கம் தெரிவிக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.

ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை பெற்றுக் கொள்ளும் இலகுவான வழிமுறையை இதுவரை காலமாக நாம் அவர்களுக்கு கொடுத்துள்ளோம். இப்போதும் தோட்டத் தொழிலாளர்கள் அவர்கள் கேட்கும் தொகைக்கு அதிகமாகவே சம்பாதிக்கின்றனர். ஆனால் தொழிற்சங்கங்கள் எமது திட்டத்தை விரும்பவில்லை.

எனவே இப்போது அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் விடுத்து ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில் எம்மால் அரசாங்கத்தை மீறிய நடவடிக்கைகளை கையாள முடியாது. எனவே அதனை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

எனவே வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுப்போம். ஆனால் இதில் நாமும் மாற்று வேலைத்திட்டங்களை கையாள வேண்டியுள்ளது. குறிப்பாக கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து நாம் வெளியேறுவோம்.

எம்மால் ஆயிரம் ரூபாவையும் கொடுத்து சிறப்பு கொடுப்பனவுகளையும் கொடுக்க முடியாது. இந்தியாவில் நாளாந்தம் 540 ரூபா பெற்றுக் கொள்ள 30 கிலோ கிராம் தேயிலை பறிக்க வேண்டும். ஆனால் நாம் 18 கிலோ கிராம் தேயிலை நாளாந்தம் பறிக்க வேண்டும் என்றே கூறுகின்றோம்.

அதுமட்டுமல்ல விசேட கொடுப்பனவுகள் என்பவற்றையும் உள்ளடக்கி ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமான தொகை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான சிறந்த வேலைதிட்டத்தை நாம் முன்வைத்தும் தொழிற்சங்கங்களின் சுயநல நோக்கங்களுக்காகவும், அரசியலுக்காகவும் மக்களை நெருக்கடியில் தள்ளிவிட்டனர்.

எனவே இந்த மாதத்தில் இருந்து ஒரு சில மாதங்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கொடுத்துப் பார்ப்போம், எமது வருமானத்திற்கு இது சாத்தியமாக இல்லையென்றால் அடுத்த கட்டமாக மாற்று வழிமுறைகளை கையாள்வோம்.

இதில் குறைந்தபட்ச சம்பளத்தை மட்டுமே சம்பள நிர்ணய சபையினால் தீர்மானிக்க முடியும். ஏனைய எந்த கொடுப்பனவுகளையும் வழங்குமாறு அவர்களால் வலியுறுத்த முடியாது.

எனவே அடிப்படைச் சம்பளம் குறைந்தபட்ச சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதனை நாம் கொடுப்பதில் நெருக்கடிகள் ஏற்பட்டால் அடுத்த படியாக ஏனைய கொடுப்பனவுகளில் தளர்வுகள் ஏற்படும். நாம் அவ்வாறான மாற்று வேலைத்திட்டமொன்றை கையாள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். எம்மால் இரண்டு சட்டங்களை கையாள முடியாது.

ஒன்று வேலை நாட்களில் குறைவு, அல்லது மேலதிக கொடுப்பனவுகளில் தளர்வுகள் செய்ய வேண்டிய நிலைமை உருவாகலாம். எவ்வாறு இருப்பினும் ஒரு சில மாதங்கள் நிலைமைகளை கண்காணித்து அடுத்த கட்டத்தில் மாற்று வேலைத்திட்டங்களை எடுப்பது குறித்து யோசிப்போம்.

ஒன்றை மட்டும் கூறுகின்றோம், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள திட்டத்தினால் மக்களே பாதிக்கப்படப் போகின்றனர். குறுகிய காலத்தில் தேயிலை தோட்டங்கள் நாசமாகி தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடப்போகின்றது. அதற்கு நாம் பொறுப்பல்ல. 

பெருந்தோட்ட நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்தால் அத்துடன் தோட்டங்களை கைவிட்டு வெளியேறி விடுவார்கள். அதன் பின்னர் தொழிலாளர்களே பாதிக்கப்படப் போகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment