ஆப்கானில் தலிபான்களின் புதிய இராணுவ முன்னேற்றம் பற்றி அமெரிக்கா எச்சரிக்கை - டிரம்பின் உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு அறிவித்த ஜோ பைடன் நிர்வாகம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

ஆப்கானில் தலிபான்களின் புதிய இராணுவ முன்னேற்றம் பற்றி அமெரிக்கா எச்சரிக்கை - டிரம்பின் உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு அறிவித்த ஜோ பைடன் நிர்வாகம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நோட்டோ துருப்புகள் வாபஸ் பெற்றால் தலிபான்கள் நாடெங்கும் வேகமாக முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் முந்தைய டிரம்ப் நிர்வாகம் மற்றும் தலிபான்களுக்கு இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி, ஆப்கானில் எஞ்சி இருக்கும் அனைத்து அமெரிக்க துருப்புகளும் அடுத்த மாத இறுதியில் வாபஸ் பெற வேண்டி உள்ளது.

எனினும் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானிக்கு பிளிங்கன் எழுதி இருக்கும் கடிதத்தில் ‘புதிய தாக்குதல்கள்’ பற்றி எச்சரித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு படையெடுத்த அமெரிக்கா தலிபான்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றியது. செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாகவே அமெரிக்கா ஆப்கானை தாக்கியது.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வது பற்றி ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தது.

தலிபான்களுடனான இந்த உடன்படிக்கையின்படி, தலிபான்களின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு பகரமாக மே மாதம் முதலாம் திகதி ஆப்கானில் இருக்கும் அமெரிக்கா தலைமையிலான 10,000 நேட்டோ படைகளை வாபஸ் பெற இணக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த படையினர் வாபஸ் பெறப்படும் முன்னர் தலிபான்கள் தீவிரவாதிகளுடனான உறவை துண்டிப்பது உட்பட அதன் பொறுப்புகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டி இருப்பதாக வெள்ளை மாளிகை தற்போது குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் தொடர்ந்தும் உச்ச நிலையிலேயே உள்ளது. அங்கு ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண் நீதிபதிகள் இலக்கு வைத்து படுகொலை செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் பிளிங்கன் எழுதி இருக்கும் கடிதத்தில் ஆப்கானில் 90 நாட்கள் வன்முறை குறைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பதோடு “நிரந்தர மற்றும் விரிவான யுத்த நிறுத்தம் ஒன்றை” எட்டுவதற்கு உதவியாக ஐ.நா மூலமான புதிய சர்வதேச கண்காணிப்பு முயற்சி ஒன்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைவதை தடுக்க அவசர நடவடிக்கை ஒன்றை எடுப்பது பற்றியும் பிளிங்கன் எச்சரித்துள்ளார். ஆப்கான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஸ்தம்பித்திருக்கும் நிலையில் வன்முறைகளை தவிர்த்து புதிய பேச்சுவார்த்தையை நடத்துவது பற்றி அவதானம் செலுத்தும்படி ஆப்கான் ஜனாதிபதி தலிபான்களிடம் கடந்த சனிக்கிழமை கோரி இருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad