ஊடகவியலாளர் கறுப்பு வேனில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தின் உண்மை அம்பலம் - ராஜித்த, அவரது மகன் ஆகியோரை விசாரிக்க குற்றத் தடுப்புப் பிரிவு நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

ஊடகவியலாளர் கறுப்பு வேனில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தின் உண்மை அம்பலம் - ராஜித்த, அவரது மகன் ஆகியோரை விசாரிக்க குற்றத் தடுப்புப் பிரிவு நடவடிக்கை

(எம்.எப்.எம்.பஸீர்)

கறுப்பு வேனில் வந்த நால்வரால் கடத்தி, சித்திரவதை செய்யப்பட்டதன் பின்னர் தெமட்டகொடை பகுதியில் கைவிட்டுச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட, மத்துரட்ட, மஹிம பத்திரிகைகளின் ஊடகவியலாளர் என கூறப்படும் சுஜீவ கமகே எனும் 62 வயதான நபர் குறித்த தாக்குதல் சம்பவமானது ஒரு நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் இது தெரியவந்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அவரது மகன் சத்துர சேனாரத்ன ஆகியோரை விசாரிக்க கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில் விஷேட செய்தியாளர் சந்திப்பை நடாத்தி அவர் இதனை வெளிப்படுத்தினார்.

குறித்த போலி நாடக அரங்கேற்றத்துடன் ராஜித்த சேனாரத்ன, சத்துர சேனநாயக்கவுக்கு ஏதும் தொடர்புகள் உள்ளனவா என இவ்விசாரணைகளில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கையில், 'கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி காலை 7.00 மணியளவில், மீரிகமையில் வைத்து இந்த கடத்தல் நடைபெற்றதாகவும், பின்னர் ஒரு இடத்துக்கு அழைத்து சென்று கடத்தல் காரர்கள் 'சிப்' ஒன்று தொடர்பில் விசாரித்து கையில் சூடு வைத்து சித்திரவதை செய்ததாகவும், குறித்த ஊடகவியலாளர் என கூறப்படும் நபர் பொலிஸில் முறையிட்டிருந்தார்.

தான் ஒவ்வொரு நாளும் தம்பதெனியவில் உள்ள தனது வீட்டிலிருந்து மீரிகமைக்கு வந்து அங்கிருந்து ரயிலில் தெமட்டகொடைக்கு வருவதாகவும் அங்கிருந்து பொரளையிலுள்ள தனது அலுவலகம் செல்வதாகவும் கூறியிருந்த அவர், 10 ஆம் திகதியும் அவ்வாறு வந்த போது மீரிகமையில் வைத்து கடத்தப்பட்டதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 6 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், இந்த கடத்தல் சம்பவம் போலியாக புனையப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்தது. அந்த விசாரணைகளில், குறித்த நபர் கடத்தப்படவில்லை என்பதும் நீர்கொழும்பிலிருந்து ரயிலில் தெமட்டகொடைக்கு குறித்த தினம் வருகை தந்துள்ளமையும் சி.சி.ரி.வி. காணொளி ஊடாக பொலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெமட்டகொடையிலிருந்து அந்த நபர் நேராக திம்பிரிகஸ்யாய பகுதியில் உள்ள சத்துர சேனாரத்னவின் அலுவலகத்துக்கு சென்றுள்ளமையும் அங்கு முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வருகை தந்துள்ளமையும் அதன் பின்னரே குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

அவரது உடலில் உள்ள சூட்டுத் தழும்புகள், 9 ஆம் திகதி இரவு, அவரது தம்பதெனிய வீட்டில் வைத்து, மேசன் கரண்டி ஒன்றினை சூடேற்றி அதன் ஊடாக தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டவை என தெரியவந்துள்ளது. அதற்கு பயன்படுத்தப்பட்ட மேசன் கரண்டியும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நபரும் பொலிசாரிடம் தான் அளித்த முறைப்பாடு பொய்யானது என ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வுகள் இடம்பெறும் போது இவ்வாறான போலியான சம்பவங்களை உருவாக்க முயற்சித்தன் பின்னணி தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன.

முன்னாள் அமைச்சர் ராஜித்த, அவரது மகன் சத்துர சேனாரத்ன ஆகியோரிடம் சி.சி.டி.யினர் விசாரணை நடாத்தவுள்ளனர்.' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad