"மியன்மார் நாடு ஒரு கொலைகார, சட்ட விரோத ஆட்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது", இராணுவம் இதுவரை 70 பேரைக் கொன்றுள்ளது - ஐ.நா. - News View

Breaking

Post Top Ad

Friday, March 12, 2021

"மியன்மார் நாடு ஒரு கொலைகார, சட்ட விரோத ஆட்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது", இராணுவம் இதுவரை 70 பேரைக் கொன்றுள்ளது - ஐ.நா.

பெப்ரவரி மாதம் நாட்டின் அதிகார அபகரிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் வகையில் இராணுவத்தினர் மேற்கொண்ட வன்முறைகளின் விளைவாக இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக மியன்மாரின் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் உயர் நிபுணர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் தற்போதைய நிலை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமை உரையாற்றிய மனித உரிமை புலனாய்வாளர் தோமஸ் ஆண்ட்ரூஸ், "மியன்மார் நாடு ஒரு கொலைகார, சட்ட விரோத ஆட்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது" என்றும் கூறினார்.

கொலை செய்யப்பட்டவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் 25 வயதிற்குட்பட்டவர்கள். ஆட்சி கவிழ்ப்பு மற்றும் வன்முறை படிப்படியாக அதிகரித்து வருவதால் 2,000 க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அன்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்புப் படையினர் எதிர்ப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களை கொடூரமாக தாக்கியமைக்கான விரிவான வீடியோ சான்றுகள் உள்ளன.

படையினரும் காவல்துறையினரும் அக்கம் பக்கங்களில் திட்டமிட்டு நகர்வது, சொத்துக்களை அழிப்பது, கடைகளை சூறையாடுவது, எதிர்ப்பாளர்களையும் வழிப்போக்கர்களையும் தன்னிச்சையாக கைது செய்வது மற்றும் மக்களின் வீடுகளில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தும் வீடியோக்களும் உள்ளது என்றும் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

அதேநேரம் சிரேஷ்ட இராணுவத் தலைவர்கள் மீதும், நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரங்களான “இராணுவத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் மியான்மரின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் உட்பட” பலதரப்பு தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad